பௌத்தர்களின் ஆதரவைப் இனவாதம் தொடர்ந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்

ஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படும் நாட்டை சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இனியாவது விளங்கிக் கொள்ள வேண்டும். 

பௌத்த மக்களின் ஆதரவை பெறுவதற்காக அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடருமாயின் பாரிய விளைவுகள் ஏற்படும் என  பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரண நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

 நாட்டின் ஆட்சி முறைமையினை அடிப்படையாகக் கொண்டு  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஒரு நாட்டை அங்கீகரிக்கும். 

அந்த வகையில் இலங்கை ஜனநாயக நாடு என்ற நிலைப்பாட்டில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படும் போது சர்வதேசம் கேள்வி எழுப்பும் இதற்கு  பதிலளிக்க வேண்டியது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்விடயத்தில் இறையான்மை என்பதைக் கூறி சர்வதேசத்தை வெறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை பல விடயங்களை உணர்த்தியுள்ளது. 

2009 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இலங்கை விவகாரம் மனித உரிமை பேரவையில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இலங்கைக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து  செயற்பட்ட நாடுகள்  இம்முறையும் இலங்கைக்கு எதிராகவே  செயற்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த வருடம் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகள் இம்முறை இலங்கை விவகாரத்தில் அமைதி காத்துள்ளமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்றதாக  குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்  தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. 

மாறாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் மீது அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித அடக்கு முறை தொடர்பில் மனித உரிமை பேரவையில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாசாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இலக்காக கொண்டு தொல்பொருள் அகழ்வராய்ச்சி, தமிழ் சமூகத்தினர் மீது வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஆகியவற்றை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.

ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணாக செயற்படும் நாட்டை  ச்ர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இனியாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்குடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரும் அடக்குமுறைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தனி சிங்கள மக்களின் ஆட்சியமைத்துள்ளோம் என்று பெருமிதம் கொள்ளும் அரசாங்கத்தை  சிங்கள பௌத்த மக்களே  புறக்கணிப்பார்கள் என்றார்.

-வீரகேசரி பத்திரிகை- (இராஜதுரை ஹஷான்)