அக்கறை எடுத்தால் நீரிழிவு ஒரு நோயல்ல!

நீரிழிவு நோயாளிகள், வாழ்க்கை முறையில் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம், அந்நோயைத் திறம்படச் சமாளிக்க முடியும். கடுமையான உடற்பயிற்சிகளைக் கண்டு அஞ்சாமல், கொஞ்சம் கொஞ்சமாக முயலலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில், நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவும் குறைக்கவும் முடியும். நீரிழிவு நோயாளி, சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு நோய் குறித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற கனடா நாட்டு விஞ்ஞானிகள் கூட்டணி, இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.

இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலில் இது 1991ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது.

ஐக்கிய நாடுகள் சபை, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னத்தை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக, நீரிழிவு நோய்க்கு மட்டுமே, ஐ.நா சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகெங்கும் சுமார் 347 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இது, 2030ஆம் ஆண்டுக்குள் ஏழாவது இடத்தைப் பிடித்துவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டொக்டர் ஒருவர் “நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர், தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

எமது இரத்தத்தில், இனிப்புச்சத்தின் (குளுக்கோஸ்) அளவு வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோஸானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோஸாக மாற்றப்பட்டு, குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசஸ் காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்துக்குத் தேவையான குளுக்கோஸ், எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோஸ் உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும், சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். ‘இன்சுலின்’ எனப்படும் ஓமோன் ஆகும்.

இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது, இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோஸ் உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோஸின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் குளுக்கோஸை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோஸின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோஸின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்போது, சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோஸை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோஸ் போகும் போது, உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
  2. அடிக்கடி தாகம் ஏற்படல்.
  3. அசாதாரண பசி ஏற்படல்.
  4. உடல் சோர்வாக இருத்தல்.
  5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
  6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
  7. கை, கால்களில் விறைப்புத் தன்மை ஏற்படுதல்.
  8. தேகத்தில் பருக்களும் கட்டிகளும் தோன்றல்.
  9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
  10. கண் பார்வை குறைவடைதல்.
  11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாள்கள் எடுத்தல்.
  12. எளிதில் கோபமடைதல்.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை, நீங்கள் அவதானித்தால், அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப் பரிசோதனை செய்வதன் மூலம், அந்நோய் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு, இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே, இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்

நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டொக்டரை அணுகி உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும். பொதுவாக நீரிழிவு நோயை நான்காக வகைப்படுத்தலாம். இந்த நான்கு வகையான நீரிழிவு நோய் வகைகளே, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. குழந்தை பிறந்தது முதல் 30 வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால், அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருக்கிறது. தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச் சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவு, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை உண்மையாகும்.

டாக்டர் வெ. நாகநாதன் – தமிழ்மிரர் இதழ் 14-11-2022

Check Also

வயது  வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய குடற்புண் – GASTRITIS

Gastritis சிலருக்கு எந்த அறிகுறியையும் கொடுக்காவிட்டாலும் கடுமையான வயிற்று வலி, வாந்தி, சமிபாடின்மை போன்ற நோயறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு ஏற்படும் …

You cannot copy content of this page