வீண் அச்சம் வேண்டாம்; சமூகப் பரவல் இல்லை – அஜித் ரோஹன

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றானது இலங்கையில் இதுவரை 32 கொத்தணிகள் ஊடாக பரவியுள்ள நிலையில்,  தற்போது கந்தகாடு புனர்வாழ்வு மையத்தை மையப்படுத்திய கொத்தணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயலணி உறுப்பினரும், குறித்த விடயம் தொடர்பிலான பொலிஸ் பேச்சாளருமான, பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  

இந் நிலையில் கந்தக்காடு கொவிட் கொத்தணி பரவல், சமூக பரவல் அல்ல எனவும், குறித்த முகாமுக்கு வெளியே 20 தொற்றாளர்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் மக்கள் வீண் அச்சத்தை தவிர்த்து உரிய சுகாதார அறிவுறுத்தல்களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது போதுமானது எனவும் அவர் கூறினார்.

‘ இலங்கையில் கொரோரா பரவல் 32 கொத்தணிகள் ஊடாக இடம்பெற்றுள்ளன. அதில்  பெரிய  கொத்தணி பரவலாக 31 ஆவது கொத்தணியாக அடையாளம் காட்டப்டும் கடற்படை கொத்தணி உள்ளது. அக்கொத்தணி பரவல் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளான 950 பேர் அடையாளம் காணப்பட்டாலும், தற்போது அக்கொத்தணியில் பாதிக்கப்பட்ட 8 பேர் மட்டுமே சிகிச்சை நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அந்த கொத்தணி பரவலை கட்டுப்படுத்தியது போல, தற்போது உருவாகியுள்ள 32 ஆவது கொத்தணி பரவலான கந்தக்காடு பரவலையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொத்தணி பரவல் புனர்வாழ்வு முகாமுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. முகாமுக்கு வெளியே 20 தொற்றாளர்களே கண்டறியப்பட்டுள்ளனர். அதிலும் 16 பேர் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சேவை செய்த ஒருவரின் தொடர்பாடல் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய நால்வரே வேற்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்யும் போது சமூக பரவல் இல்லை என்பது துல்லியமாக தெரிகின்றது’ என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவுடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் முதலாவது கொவிட் 19 தொற்றாளர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டார். சீனப் பெண் ஒருவரே அவ்வாறு அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் இலங்கையில்  கொவிட் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் கடந்த மார்ச் 11 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த மார்ச் 18 ஆம் திகதி நாட்டின் சில இடங்களிலும், பின்னர் மார்ச் 20  ஆம் திகதி நாடளாவிய ரீதியிலும்  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு அது சுமார் ஒரு மாத காலம் வரை நீடித்தது. 

இந் நிலையில் தற்போது 2671 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் 659 பேர் மட்டுமே தற்போதும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா காரணமாக 11 உயிரிழப்புக்கள் மட்டுமே பதிவாகின. சுகாதார, பாதுகாப்புத் துறையினர் இணைந்து இந்த தொர்று பரவலுக்கு எதிராக  முன்னெடுத்த  காத்திரமான நடவடிக்கைகள் ஊடாக இந்த தொற்று பரவல் கட்டுப்படுத்தல் சாத்தியமானது.

இலங்கையில் தற்போது கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஆரம்பித்த  32 ஆவது கொத்தணி பரவல் தொடர்பில் பல்வேறு பொய்யான தகவல்களும், மக்களை அச்ச மூட்டும்  போலி, திரிவுபடுத்தப்பட்ட தகவல்கலும் ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

 உண்மையில் கடந்த ஜூன் 26 ஆம் திகதி,  கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வந்த கைதி ஒருவர் விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார்.  குறித்த கைதியின் நிலையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கடந்த 5 ஆம் திகதி அவருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு 6 ஆம் திகதி அவருக்கு கொரோனா இருப்பது உருதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்தே கந்தகாடு  கொவிட் கொத்தணி தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது. கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் 831 பேர்  புனர்வாழ்வின் கீழ் உள்ள நிலையில் அவர்களில் 444 பேருக்கே கொரோனா தொற்றுள்ளமை பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

அதே நேரம் அம்மையத்தில் 320 ஆலோசகர் மற்றும் பணிக் குழ்வினர் செயற்படும் நிலையில் அவர்களில் 63 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. இந் நிலையில் அந்த முகாமுக்கு வெளியே 20 பேருக்கு மட்டுமே தொற்று  இதுவரை உறுதியாகியுள்ளது. அதிலும் 16 பேர் ராஜாங்கனை  பகுதியைச் சேர்ந்தோர்.

இலங்கையில் கொவிட் கொத்தணிகளில் பாரிய கொத்தனி பரவலாக கருதப்படும் கடற்படை கொத்தணி பரவலில், விடுமுறைக்கு சென்றோர், அவர்கலது உறவினர், முகமில் உள்ளோர் என தொடர்பாடல் வலையமைப்பை கண்டரிந்து கட்டுப்படுத்தியதைப் போல இதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் வீன் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. எந்த சமூக பரவலும் இல்லை. எனினும் கொரோனா உலகில் இருக்கும் வரை நாம்  எமக்கு கூறப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அடிமையானவர்களாக வாழ வேண்டும். வீணான அச்சங்களை தவிர்த்து உரிய சுகாதார ஆலோசனைகலை மட்டும் பின்பற்றுவது போதுமானது.

 தற்போதும் சுமார் 1000 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவரை தனிமைப்படுத்துவது என்பது அவருக்கு கொரோனா இருக்கின்றது என அர்த்தம் அல்ல. எனவே அது தொடர்பில் வீனான அச்சம் தேவை இல்லை.  முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு கழுவுதல் போன்ற சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

 அடுத்து வரும் நாட்களில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார்  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ‘ என தெரிவித்தார்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page