கிரிக்கட் வீரரின் மனைவிக்கு பம்பலப்பிட்டியில் காசு கிடைத்தபோது, கணவன் ஆட்டமிழந்த சம்பவம் நடந்தது

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் அபிமானத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் , இதுதொடர்பில் ஐ.சி.சிக்கு அறிவித்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் குண்டுத் தாக்குதல்களை செய்துவரும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் புதிய தாக்குதலாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக கூறியிருந்தார்.

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த கருத்தினால் கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் இலங்கை பெற்றிருக்கும் அபிமானத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தக்காலக்கட்டத்திலே விளையாட்டு அமைச்சராக செயற்பட்ட இவர் அப்போது எதனையுமே தெரியப்படுத்தாமல், தற்போது இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான காரணம் என்ன? இதனால் யாருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது?

கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் எமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கைதான் முன்னாள் கிரிக்கட் அணியின் தலைவர் குமார சங்ககார சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவராக தெரிவுச் செய்யப்படுவார் என்பது. அவர் தற்போது எம்.சி.சியின் தலைவராகவும் பதவிவகித்து வருகின்றார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன முன்னணியில் இருக்கும் வீரர். இவர் தற்போது ஐ.பி.எல்.போட்டியில் போட்டியிட்டு வரும் ‘மும்பாய் இந்தியன்ஸ்’ அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருக்கின்றார். 800 விக்கட்டுகளை வீழ்த்தி நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.

அவர் தற்போது ராஜபக்ஷாக்களுடனேயே இணைந்து செயற்பட்டு வருகின்றார். சுழல் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போன்றோர் முன்னணி வீரர்கள் இந்த இறுதிப் போட்டியில் விளையாடிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் யார்மீது குற்றம் சுமத்தியுள்ளார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்?

இந்த இறுதிப்போட்டியை பார்வையிடுவதற்காக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சென்றிருந்தார். இதன்போது ஏதோ சதி நடந்திருப்பதாகவும் பல்வேறு கருத்துகள் வெளிவந்திருந்தன. இதேவேளை உலகக்கிண்ண போட்டிக்கான தொடர் போட்டிகளிலே வெற்றிக் கொண்டு இறுதிப் போட்டிக்கு முகங்கொடுக்கும் போது ஏற்கனவே போட்டிகளை வெற்றி கொண்ட அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை இறுதி போட்டியின் போது விலக்குவது எந்த நாட்டிலாவது இடம்பெற்றுள்ளதா? இலங்கையில் மாத்திரமே இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. அதற்கமைய இறுதிப்போட்டியில் வெற்றிப் பெற்று வந்த அணியிலிருந்து நான்கு வீரர்களை நீக்கியிருந்தனர். இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும். தெரிவுக்குழுவினர்தானே. அப்போது அரவிந்த டி சில்வாவே தெரிவுக் குழுவுக்கு பொறுப்பாக இருந்தார். இலங்கையில் கிரிக்கட் சபைக்கு பொறுப்பாக இருந்தவர்களே இலங்கை தோல்வியடையும் என்று பந்தயம் வைத்துள்ள சம்பவங்களும் இந்நாட்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று மஹிந்தானந்தவுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

கிரிக்கட் வீரர் ஒருவரின் மனைவிக்கு பம்பலப்பிட்டியில் காசு கிடைக்கும் போது , கணவன் ஆட்டமிழந்த சம்பவமும் இலங்கை கிரிக்கட் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஐ.சி.சியினர் விசாரணைகளையும் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட கிரிக்கட் வீரர் மொட்டுக் கட்சியின் தேசியப்பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் மஹிந்தானந்தவின் கருத்து காரணமாக கிரிக்கட் விளையாட்டின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் இலங்கை பெற்றிருந்த அபீமானத்திற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பில் கவனம் செலுத்தி. ஐ.சி.சிக்கு முறைப்பாடு அளித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். (செ.தேன்மொழி)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters