கொரோனாவும் நோன்புப் பெருநாளும்.

எமது நாட்டில்‌ பெரும்பாலான மக்கள்‌ அதற்கு மாறாக ஏதோ விடுமுறையைக்‌ கழித்துக்‌ கொண்டிருக்கும்‌ உணர்விலேயே இன்னும்‌ இருப்பதைக்‌ காணமுடிகிறது. அதிலும்‌ முக்கியமாக எமது முஸ்லிம்‌ சமூகம்...

மிகப்‌ பெரும்‌ சோதனையாக கொரோனாவின்‌ தாக்கம்‌ முழு உலகின்‌ பொருளாதாரம்‌, கல்வி, சுகாதாரம்‌ என அனைத்தையும்‌ ஸ்தம்பிக்கச்‌ செய்து நான்கு மாதங்களாகின்‌றன.

ஆரம்பத்தில்‌ மக்களுக்‌கிடையே இருந்த மரணபயமும்‌, பீதியும்‌, மனஉளைச்சலும்‌ படிப்படியாகக்‌ குறைந்து வருவது போன்ற ஒரு நிலையை அவதானிக்க முடிகிறது. கொரோனா வைரஸ்‌ தாக்‌கத்தினால்‌ பலியான உயிர்கள்‌ இலட்சங்களைத்‌ தொட்டு அதனால்‌ பாதிப்புக்குள்ளான பல அபிவிருத்தியடைந்த நாடுகளும்‌ இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்‌ நிலையிலோ அல்லது அன்‌றாட வாழ்க்கைக்கு திரும்பும்‌ நிலையிலோ தமது அடுத்த நடவடிக்கைகளை மேற்‌கொள்ள முடியாமல்‌ தவிக்கின்‌றன. மீளப்‌ பெற முடியாத மனித இழப்புக்களின்‌ தாக்கத்‌தினால்‌ மிகவும்‌ அவதிப்படுகின்றனர்‌.

ஆனால்‌ எமது நாட்டில்‌ பெரும்பாலான மக்கள்‌ அதற்கு மாறாக ஏதோ விடுமுறையைக்‌ கழித்துக்‌ கொண்டிருக்கும்‌ உணர்விலேயே இன்னும்‌ இருப்பதைக்‌ காணமுடிகிறது. அதிலும்‌ முக்கியமாக எமது முஸ்லிம்‌ சமூகம்‌ இந்தக்‌ கொடிய நோயின்‌ சோதனையிலிருந்து தம்மைப்‌ பாதுகாக்க எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்‌ என்பதும்‌ இதனை எந்தளவு பாரதூரமாக எடுத்து தமது அன்றாட வாழ்க்கை முறைகளை மாற்றிக்‌ கொள்ள முயற்சிக்கிறார்கள்‌ என்பதும்‌ இன்னும்‌ கேள்விக்‌ குறியாகவே இருக்கின்றது.

உண்மை விசுவாசிகளுக்கு இவ்வாறான சோதனைகள்‌ இறைவனை நெருங்குவதற்கான மிகப்‌ பெரியதொரு அவகாசமே தவிர வீணான விடயங்களில்‌ தமது பொழுதுகளைக்‌ கழிக்கவும்‌ பாவச்‌செயல்களில்‌ ஈடுபடுவதற்குமான சந்தாப்பமல்ல.

இத்‌ தொற்று நோய்‌ வளர ஆரம்பித்த நாட்கள்‌ முதல்‌ இன்று வரை கொரோனா பற்றிய விழிப்புணர்வு முயற்சிகள்‌ பல வழிகளிலும்‌ மேற்கொள்ளப்படுகின்றன. தனிமைப்படுத்தல்‌ மற்றும்‌ சுத்தம்‌ பேணுதல்‌, சுகாதார ஒழுக்கங்கள்‌ பற்றி அன்றாடம்‌ வைத்திய ஆலோசனைகளும்‌ அறிவுறுத்தல்களும்‌ வானொலி, தொலைக்காட்சி மற்றும்‌ ஏனை ஊடகங்கள்‌ மூலமாகவும்‌ மேற்கொள்ளப்‌படுகின்றன. ஆனால்‌ மக்கள்‌ அதனை செவிசாய்த்து நடப்‌பதில்‌ மிகவும்‌ அசிரத்தையாக இருப்பது ஆச்சரியத்தைத்‌தருகிறது.

இறப்பு என்பது இயற்கை நிகழ்வு. மரணித்த ஒரு மனித உடலை இஸ்லாமியர்கள்‌ தமது மார்க்கக்‌ கடமைகளை நிறைவேற்றிய பின்‌ அடக்கம்‌ செய்வதே இயல்பு. ஆனால்‌ கொரோனா தொற்றின்‌ மூலம்‌ ஒரு இறப்பு ஏற்படும்‌ பட்சத்தில்‌ மரணித்த உடலை அடக்கம்‌ செய்ய முடியாதென்றும்‌ அது எரிக்கப்பட வேண்டும்‌ என்ற சட்டம்‌ நமது நாட்டு வர்த்தமானி அறிவித்தல்‌ ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலும்‌ நமது சமூகம்‌ தமது இறுதி முடிவின்‌ கொடூரத்தைப்‌ பற்றி சிந்திக்காமல்‌ பொடுபோக்காக இருப்‌பதேன்‌?

ஜும்‌ஆத்‌ தொழுகை மற்றும்‌ ஐவேளைத்‌ தொழுகைகளை பள்ளிகளில்‌ தொழுவதற்குத்‌ தடை, புனித மாதத்தின்‌ ஏனைய கூட்டுத்‌ தொழுகைகளுக்குத்‌ தடை, திருமண நிகழ்வுகளுக்குத்‌ தடை, உறவினர்கள்‌ ஒன்று கூடல்களுக்குத்‌ தடை. இவை மற்ற மதத்தவர்களுக்கும்‌ பொதுவானதே.

இவ்வாறு அத்தனை தடைகளும்‌ எமது பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே முழு உலக நாடுகளிலும்‌ அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்கும்‌ போது ஊரடங்கு தளாத்தப்பட்டால்‌ மட்டும்‌ மக்கள்‌ புற்றீசலைப்‌ போல்‌ வெளியில்‌ சென்று கடைத்‌ தெருக்களிலும்‌ வீதிகளிலும்‌ மிகவும்‌ சாதாரண மாகவே நடமாட ஆரம்பித்து விடுகின்றனர்‌. நாம்‌ ஏன்‌ நமது பாதுகாப்பைப்‌ பற்றி சிந்திப்பதில்லை?

சென்ற வருட இறுதி மாதங்களில்‌ கொரோனா உலக நாடுகளில்‌ மெதுவாகப்‌ பரவ ஆரம்பித்தது. அதனால்‌ கிறிஸ்துமஸ்‌ பண்டிகையைப்‌ பல நாடுகளில்‌ கொண்டாடுவதைத்‌ தவிர்த்தனர்‌. அதன்‌ பின்னர்‌ இறப்பு விகிதம்‌ அதிகரிக்க ஆரம்பித்தது. தமிழ்‌ சிங்களப்‌ புத்தாண்டிலும்‌ கூட கடைகள்‌ வெறிச்சோடிக்கிடக்க முழுதாக தனிமைப்‌படுத்தல்‌ மூலம்‌ தத்தமது வீடுகளுக்குள்‌ பண்டிகை கொண்டாடப்பட்டது. ஈஸ்டர்‌ தினமும்‌ கொண்டாட்டங்கள்‌ தவிர்க்கப்பட்டது. அதே போல்‌ வெசாக்‌ பண்டிகையும்‌ ஊரடங்குடன்‌ ஒன்று கூடல்‌களையும்‌, தோரணங்கள்‌, அன்ன தானங்களையும்‌ தவிர்த்து தத்தமது வீடுகளில்‌ தனிமையாகக்‌ கொண்டாடப்‌படுகிறது.

அடுத்து நோன்புப்‌ பெருநாள்‌…? முஸ்லிம்கள்‌ மிகவும்‌ சிந்தித்து நடந்து கொள்ள வேண்டிய தருணமிது. சில இனவாத ஊடகங்கள்‌ தமது கவனத்தை முஸ்லிம்களின்‌ மீது செலுத்தி கமெராக்களை ஆயத்தமாக்கி வைத்துக்‌ கொண்டிருக்‌கின்றன. சில இனவாதப்‌ பாம்புகள்‌ எமது சிறு தவறுகளையும்‌ ஊதிப்‌ பெரிதுபடுத்தி எம்மைக்‌ கொத்துவதற்காகக்‌ காத்துக்‌ கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு இக்‌ கட்டான சூழ்நிலையில்‌ நோன்பும்‌ அதனைத்‌ தொடர்ந்து பெருநாளும்‌…? உலகமே சோதனையின்‌ விளிம்பில்‌ சோகத்தில்‌ தத்‌தளித்துக்‌ கொண்டிருக்கும்‌ வேளையில்‌ அதில்‌ எமது பங்களிப்பையும்‌ செய்துகொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பம்‌ இது.

ஊரடங்கு தளாத்தப்‌பட்டாலும்‌ முக்கியமாகப்‌ பெண்கள்‌ வீதிகளிலும்‌ கடைத்‌ தெருக்களிலும்‌ புத்‌தாடைகள்‌ வாங்க அலைந்து திரிவது தவிர்க்கப்பட வேண்டும்‌. அவர்களை வீடுகளுக்குள்‌ பாதுகாப்பாக இருந்து தனிமைப்படுத்‌ தலைக்‌ கடைப்பிடிக்கச்‌ செய்வதில்‌ கணவர்மார்கள்‌ அல்லது வீட்டின்‌ பெரியவர்கள்‌ மிகப்‌ பொறுப்புடன்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. ஏனைய மதத்தவர்கள்‌ அவராகளது பெருநாட்களைக்‌ கொண்டாடுவதில்‌ கடைபிடித்த ஒழுக்கத்தை நாமும்‌ கடைப்பிடித்து நோன்புப்‌ பெருநாளை அவரவர்‌ வீடுகளில்‌ தனிமையாகக்‌ கொண்டாடுவோம்‌.

எல்லாச்‌ சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும்‌ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இஸ்லாம்‌ தெளிவாக சொல்லித்‌ தந்திருக்கிறது. தமது நெருங்கிய ஆலிம்‌ உலமாக்களிடமாவது தெரியாதவற்றைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்வோம்‌.

“ஒழுக்கமற்ற ஒரு சமூகம்‌” என்றும்‌ , ‘கொரோனாவைப்‌ பரப்பிய ஒரு சமூகம்‌” என்றும்‌ அடை மொழிகளை முஸ்லிம்‌ களுக்குச்‌ சூடக்‌ காத்திருப்பவர்களுக்கு நற்பண்புகளைப்‌ பேணுவதில்‌ இஸ்லாமியர்கள்‌ உலக மக்களுக்கு உதாரணமானவர்கள்‌ என்பதைப்‌ புரிய வைக்கும்‌ தருணமிது.

இதுவரை கொரோனா வினால்‌ இறந்த 9 பேரில்‌ நான்கு பேர்கள்‌ முஸ்லிம்கள்‌. சுட்டெரிக்கப்பட்ட ஜனாஸாக்‌களுக்காகவும்‌ அவர்களது குடும்பத்தினருக்காகவும்‌ துஆச்‌ செய்வோம்‌. இது போன்ற நிலைமை இனியும்‌ ஏற்படாதிருக்க அரச மற்றும்‌ சுகாதார ஆலோசனைகளைக்‌ கடைப்பிடிப்பதில்‌ கவனம்‌ செலுத்துவோம்‌. எம்‌ ஒவ்வொ ௬ுவரது இறுதி முடிவும்‌ இறை பொருத்தத்தைப்‌ பெற்ற நல்ல முடிவாக அமையும்‌ வகையில்‌ நாமும்‌ நடந்து கொள்ள முயற்சிப்போம்‌! (கல்ஹின்ன பஹ்மி ஹலீம்டீன்)

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

SOURCEவிடிவெள்ளி 08-05-20
Previous articleஇலங்கையில் கொரானாவை வென்ற மனிதாபிமானம்
Next articleபெருநாளை வீடுகளில் இருந்து எளிமையாக கொண்டாடுவோம் – இஸ்திகார் இமாதுதீன்