லிட்ரோ கேஸ் விவகாரம் – வீரப்பும் பின் வாலை சுருட்டுதலும்

ஒவ்வொரு வீட்டிலும்‌ சமையலறை மீதான அச்சம்‌, நாளுக்கு நாள்‌ அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எப்போது வெடிக்குமோ, என்ன ஆகுமோ? என்ற பேரச்சத்தில்‌ பலரும்‌ பொழுதுகளைக்‌ கழித்துக்கொண்டிருக்கின்றனர்‌. இதற்கிடையில்‌, இன்னும்‌ சில நாள்களுக்கு அவதானத்துடன்‌ இருக்குமாறு விடுத்த அறிவுரை, அச்சத்தை உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டுள்ளது.

சந்தையில்‌ காஸ்‌ தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர்‌; காஸ்‌ சிலிண்டர்களின்‌ விலைகள்‌ அதிகறிக்கப்பட்டன. பொதுமக்கள்‌ மாற்று வழிகளை நாடினர்‌. இதனால்‌, ஒரளவுக்கேனும்‌ நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்‌.

விலை அதிகரிப்பதற்கு முன்னர்‌ கொள்வனவு செய்யப்பட்ட காஸ்‌ சிலிண்டரைப்‌ பயன்படுத்துவோரிடத்தில்‌ எவ்விதமான அச்சமும்‌ சூழ்கொள்ளவில்லை. இது எவ்வளவு நாள்களுக்கு என்பதுதான்‌ புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில்‌, சமையல்‌ எரிவாயு சிலிண்டரை சதாகாலமும்‌ பயன்படுத்த முடியாது.

ஒவ்வொரு குடும்பத்தின்‌ பயன்பாட்டின்‌ பிரகாரம்‌, மாதங்கள்‌ வரையறுக்கப்படும்‌. ஹோட்டல்களைப்‌ பொறுத்தவரையில்‌ ஒவ்வொரு நாளும்‌ கொள்வனவு செய்தே ஆகவேண்டும்‌. இதற்கிடையே, மூன்று நிபந்தனைகளின்‌ பிரகாரம்‌, காஸ்‌ சிலிண்டர்களை விநியோகிக்கும்‌ அனுமதியை நுகர்வோர்‌ அதிகார சபை வழங்கியிருந்தது.

இந்நிலையில்‌, அரசாங்கத்‌ தகவல்‌ திணைக்களத்தில்‌ நேற்று (07) இடம்‌ பெற்ற சஎடகவியலாளர்‌ சந்திப்பில்‌ கலந்துகொண்டு கருத்துரைத்த நுகர்வோர்‌ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்‌ லசந்த அழகியவண்ண, சமையல்‌ எரிவாயுவை (காஸ்‌) பயன்படுத்தும்‌ போது, முன்னரை விடவும்‌ கூடுதலான கவனத்தை இன்னும்‌ சில தினங்களுக்கு செலுத்துமாறு அறிவுறுத்தினார்‌.

சமையல்‌ எரிவாயு சிலிண்டரில்‌ ஏற்பட்ட கசிவையடுத்து ஏற்பட்ட தீயில்‌, இரண்டுப்‌ பெண்கள்‌ மரணித்துவிட்டனர்‌. அதிலொன்று தற்கொலை எனவும்‌ மற்றொரு பெண்ணின்‌ உடலில்‌ சீனியின்‌ அளவு குறைந்தமையால்‌ மரணம்‌ ஏற்பட்டுவிட்டதெனக்‌ கதைகளை அவர்‌ புனைந்திருக்கின்றார்‌.

விசாரணைகள்‌ முன்னெடுக்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும்‌, காஸ்‌ அடுப்புகளை இழந்தவர்களுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டியது விடயதானத்துக்குப்‌ பொறுப்பான அமைச்சின்‌ கடப்பாடாகும்‌.

எனினும்‌, காஸ்‌ விலை அதிகரிக்கப்பட்டால்‌, அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத்‌ தாக்கல்‌ செய்வோமெனக்‌ கொக்கரிக்கும்‌ அரசாங்கம்‌, பின்னர்‌ வாலைச்‌ சுருட்டிக்கொள்கிறது. இதனூடாக, நுகர்வோரை பாதிக்கப்படுகின்றனர்‌. ஒவ்வொரு விடயதானத்திலும்‌ இதே முறைதான்‌ கையாளப்படுகின்றது.

விலை அதிகரிக்கும்‌ போது, ஆரம்பத்தில்‌ எதிர்ப்புத்‌ தெரிவிப்பவர்கள்‌, மாற்று வழிகளைக்‌ கையாளுவர்‌.

பழைய குருடி, கதவைத்‌ திறவடி ‘ என்பதைப்‌ போல, சில நாள்களுக்குள்‌ பழையவற்றுக்குள்‌ திரும்பிவிடுவர்‌. அதுவும்‌ தவிர்க்க முடியாததுதான்‌. ஆனால்‌, மக்களின்‌ உயிர்களுக்கு உலை வைக்கும்‌ வகையிலான செயற்பாடுகளின்‌ போது, முதுகெலும்புடன்‌ தீர்மானங்களை எடுக்கவேண்டும்‌.

காஸ்‌ சிலிண்டர்‌ மீதான அச்சம்‌ களையப்படவில்லை. அதேபோல, அநீதி இழைக்கும்‌ நிறுவனங்களுக்கு எதிராக, அதிரடியான நடவடிக்கையை எடுப்பது, ஒரு படிப்பினையாகவும்‌ முன்மாதிரியாகவும்‌ இருக்கும்‌ என்பதை நினைவூட்டுகின்றோம்‌.

தமிழ் மிற்றோர் – 8/12/2021