அடையாள அட்டை அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேரல் பற்றிய விளக்கம்.

வார நாட்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வதியும் பொதுமக்கள் அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய நோக்கங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப் படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

திங்கள் கிழமைகளில் அடையாள அட்டையின் கடைசி இலக்கம் 1 அல்லது 2 என்ற எண்ணை கொண்டுள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

செவ்வாய்: 3 அல்லது 4
புதன்கிழமை: 5 அல்லது 6
வியாழக்கிழமை: 7 அல்லது 8
வெள்ளிக்கிழமை: 9 அல்லது 0

( Ex: உங்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 6 என்றால் உங்களுக்கு அத்தியாவசிய வேலைக்காக புதன் கிழமை வீட்டை விட்டு வெளியே செல்லலாம்)

ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும்.

இதுபோன்ற பொருட்களை வாங்க, ஒருவர் உள்ளூர் சந்தைக்குச் சென்று அருகிலுள்ள கடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிப்பு மேலும் கூறுகிறது.

அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இதில் உள்ளடங்கும். எவரேனும் மேற்படி ஒழுங்குகள் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து, தொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.

அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய செயற்பாடுகளை தொடர்ந்தும் பலமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பிரச்சினையிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.

நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும், வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100வீதம் பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமூகத்தின் நலனுக்கு தடையேற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எவருக்கும் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனை வழங்கப்படும்.

மொஹான் சமரநாயக்க – பணிப்பாளர் நாயகம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2020.04.25

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters