இலங்கையில் சீன முதலீடுகள் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிவிவகார கொள்கையில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் ஒருமித்த தன்மையிலேயே செயற்படுகிறது. முதலீடு செய்யுங்கள் என அரசாங்கம் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது என ஊடகப்பேச்சாளரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிவிவகார கொள்கையில் அரசாங்கம் பொதுத்தன்மையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. சீனா இலங்கையின் முதலீடுகளை ஆக்கிரமித்துள்ளதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது. பொருளாதார முன்னேற்றத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானதாக காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்கப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகிறது.
இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் என அரசாங்கம் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஒரு நாட்டுக்கு மட்டும் தனித்துவமான சலுகைகள் வழங்கப்படவில்லை. வெளிவிவகார கொள்கையில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையாகவும், பொது தன்மையாகவும் செயற்படுகிறது.
இந்தியா இலங்கையின் நட்பு நாடு அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வழங்கவே தீர்மானிக்கப்பட்டது. இந்தியா ஒரு சில காரணிகளை கொண்டு எமது கோரிக்கையினை நிராகரித்ததால் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு சீன நாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இது சாதாரணதொரு விடயம். நாட்டில் தற்போது பல நாடுகள் முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த சீன உயர்மட்ட இராஜதந்திரிகள் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இராஜதந்திரகளை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. வெளிவிவகார கொள்கை தொடர்பான ஒப்பந்தங்களுக்கு நாம் உட்பட்டுள்ளோம்.
நாட்டுக்கு வரும் இராஜதந்திரிகள் 48 மணித்தியாலத்துக் முன்னர் எடுத்த பி. சி. ஆர் பரிசோதனை அறிக்கையினை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் நாட்டுக்கு வந்த பின்னரும் பொதுவாக பின்பற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆகவே அரசாங்கம் எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கவில்லை.என்றார்.
Akurana Today All Tamil News in One Place