இன்று, 2022 ஜூலை 20 இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமாக நாளொன்றாகும். நாடு மிகப் பெரும் பொருளாதார மற்றம் அரசியல் நெருக்கடி களை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் ஐனாதிபதி ஒருவரை பாராளுமன்றம் தெரிவு செய்யப் போகிறது.
வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றின் காரணமாக கடந்த 13 நாட்டை விட்டு மாலைதீவு ஊடாக சிங்கப்பூருக்குத் தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து கடந்த 14 ஆம் திகதி தமது பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்தே இந்த ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்று நடைபெறும் முதலாவது முறை இதுவாகும். அரசியலமைப்பின் பிரகாரம். தமது பதவிக் காலத்தின் இடைநடுவில் ஒரு ஜனாதிபதியின் இறப்பு, இராஜினாமா, பிரஜா உரிமை இழப்பு, பதவிக் காலம் அரம்பமாகி இரண்டு வாரங்களுக்குள் பதவி ஏற்காமை, குற்றப் பிரேரணை முலம் பதவி நீக்கம் தேர்தல் வழக்கொள்றில் தோல்வியடைதல் ஆகிய காரணங்களால் ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டால் பாராளுமன்றத்திலேயே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவு செய்யும் இரண்டாவது முறை இதுவாகும். முதலாவது முறை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. 1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிமேதாச படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அப்போதைய பிரதமர் டி.பி விஜேதுங்க உடனடியாக பதில் ஜனாதிபதியானார். பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலின் போது சகல கட்சிகளினதும் இணக்கத்தில் விஜேதுங்கவுக்கு எதிராக வேறு எந்தவொரு வேட்பாளரும் நிறுத்தப்படாமையால் அவரே பிரேமதாசவின் பதவிக் காலத்தில் மிகுதியாக இருந்த ஒன்றரை ஆண்டு காலத்துக்காக ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவானார்.
இம்முறை கோட்டாபய இராஜினாமா செய்ததன் பின்னர் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியானார். இன்று(20) பாராளுமன்றத்தில் நடைபெறும் தேர்தலில் ரணிலும் போட்டியிடுவதாக அப்போதே செய்திகள் வெளியாகின. அவருக்கு எதிராக மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என நேற்று முன்தினமே (ஜூலை 17) உத்தியோகப்பற்றற்ற முறையில் கூறப்பட்டது.
இந்தத் தேர்தலில் சில விந்தையான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றத்துக்குக் தெறிவு செய்யப்படுவதற்காக போதிய வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கவில்லை. தேசிய பட்டியல் மூலமே அவர் பாராளுமன்றத்தில் இடம்பிடித்துக் கொண்டுள்ளார். அந்த ஒரேயொரு ஆசனத்தை வைத்துக் கொண்டு அரசியல் நெருக்கடி யைப் பாவித்து அவர் பிரதமரானார். இப்போது அவர் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அவர் பொதுத் தேர்லில் போட்டியிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைவர்கள் இன்று தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஐ.தே.க.வையும் ரணிலையும் தேசத்துரோகிகளாகவே எப்போதும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள், புலிகளின் நண்பர் என்றனர். புலிகளுக்கு நாட்டை தாரைவார்க்க முயல்வதாக அவர் மீது குற்றஞ்சாட்டி னர். அவர் ஏகாதிபத்தியவாத நாடுகளின் அடிவருடி என்றனர். சிங்கள- பெளத்த கலாசாரத்தை மதிக்காதவர் என்றனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் சூத்திரதாரி என்றனர்.
ஆயினும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரை பிரதராக நியமித்தார். அவருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வழங்க பொது ஜன முன்னணியினர் இணக்கம் தெரிவித்தனர். தாமே சிங்கள- பெளத்த பண்பாட்டின் பாதுகாவலர்கள் என்று கூறியவர்களின் உண்மையான இனம் மற்றும் சமயப் பற்றும் அதன் மூலம் அம்பலமாகியது.
அதனையடுத்து பசில் ராஜபக்ஷ, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து விரட்ட சதி செய்வதாக செய்திகள் பரவின. அதற்கிடையே மக்கள் எழுச்சியால் கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. பசிலும் 2023மார்ச் திரும்பி வரும் வகையில் விமான டிக்கெட்டுகளை தயார் செய்து கொண்டு விமான நிலையத்துக்குச் சென்ற போது மக்களின் எதிர்ப்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்.
அதன் பின்னர் அவரது தந்திரோபாயம் மாறிவிட்டது. துரோகியைப் போல் தமது கட்சியாலேயே பட்டம் சூட்டப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்க அவர் நடவடிக்கை எடுத்தார். ரணிலைக் கொண்டு போராட்டம் நடத்தும் குழுக்களை அடக்கிவிட்டு மீண்டும் அரசியலையும் பொருளாதாரத்தையும் கைப்பற்றிக் கொள்வதே அவரது நோக்கம் எனத் தெரிகிறது.
ஆனால், அவரது திட்டம நிறைவேறினால் உண்மையான வெற்றியாளனாகப் போவது ரணிலே. ஏனெனில் நேற்று வரை ரணிலின் பிரதமர் பதவி பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற பெரும்பான்மையின் மீதே தங்கியிருந்தது.
ஆனால், இன்றைய தேர்தலில் ரணில் வெற்றி பெற்றால் அவர் நிறைவேற்று ஜனாதிபதியாவார். அவருக்கு அதன் பின்னர் பொதுஜன முன்னணியின் பெரும்பான்மை தேவையில்லை. அவர் அதற்குப் பின்னர் பசிலை பொருட்படுத்தப் போவதில்லை. அது அவரது சுபாவம். அவர் மற்றொருவரின் கீழ் இயங்கத் தயாரில்லை. சந்திரிகாவுடனும் மைத்திரிபாலவுடனும் மோதல் ஏற்படுவதற்குக் காரணமும் அதுவே.
முன்னணியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இப்போது சிதறிப் போயுள்ளது. எனவே ரணில் ஜனாதிபதியானால் அவரை கட்டுப்படுத்த குற்றப் பிரேரணை கொண்டு வருவதாக மிரட்டுவதும் இனி கஷ்டமாகும். அப்போது ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்காகவேனும் எந்தவொரு மாவட்டத்திலிருந்தும் போதிய வாக்குகளைப் பெறாத கட்சியொன்றின் தலைவர் நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பார். அதற்கும் பெயர் ஜனநாயகம் தான்.
எனினும், இந்தத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக ரணில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் வெளியான நான்கு பேரில் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாக்க ஆகிய மூவர் மட்டுமே தாம் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
அவர் பதில் ஜனாதிபதியாக உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதலைப் பற்றி மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக அறிவித்தார். இது ஆறு நாட்களுக்கு ஜனாதிபதியாகும் பதில் ஜனாதிபதி ஒருவர் அவசரமாக செய்ய வேண்டிய விடயமல்ல. இது இன்றைய ஜனாதிபதித் தேர்தலின் போது கத்தோலிக்க எம்பிக்களின் வாக்குகளை பெறுவதற்கான உத்தியாக இருக்கலாம்.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் எரிக்கப்பட்ட எம்.பிக்களுக்கு தனித்தனியாக தொலைபேசி அழைப்புக்களை கொடுத்து அந்த வீடுகளை புனரமைப்புச் செய்து தருவதாக ரணில் கூறினார் என செய்திகள் கூறின. இதுவும் பதில் ஜனாதபதி ஒருவரால் செய்யக்கூடி யதொன்றல்ல. இது அந்த எம்.பிக்களின் வாக்குகளை பெறுவதற்காக செய்த அறிவித்தலாகவே தெரிகிறது.
ஜனாதிபதியின் பெயருக்கு முன்னால் அதிமேதகு” என்று பாவிப்பதில்லை என்றும் ஜனாதிபதியின் கொடியை இரத்துச் செய்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆறு நாட்களுக்கு ஜனாதிபதியாகும் ஒருவர் இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டுமா? இது ஜனரஞ்ககமாவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.
பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வருமுன்னரே ரணில் 13 ஆம் திகதியே அவசரகால ஊரடங்குச் சட்டங்களைப் பிறப்பித்தார். ஆர்ப்பாட்ட -க்காரர்களால் கைப்பற்றப்பட்டு இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமரின் அலுவலகம் அகியவற்றை மீட்டெடுக்குமாறு பாதகாப்பு படையினரை பணித்தார்.
இவை அவர் தேர்தலை மனதில் வைத்து செய்திருக்க மாட்டார் ஆனால் அதன் மூலம் பொதுஜன முன்னணியினரை மகிழ்ச்சியுறச் செய்ய அவரால்முடிந்தது. அக்கட்சி இந்த நடவடிக்கைகளை அங்கிகரித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டது.
சஜித் மற்றும் டலஸ் ஆகியோர் இணைந்து இருவரில் ஒருவர் மட்டும் போட்டியிட்டால் மட்டுமே ரணிவின் வெற்றி வாய்ப்பை சிலவேளை தடுக்கலாம். போட்டியிடும் ஏனைய மூவரில் ஒருவரை ஆதரித்தால் நாளை நாடு மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது தமது செயலை நியாயப்படுத்த முடியாமல் போகும் என்பதாலேயே அனுர போட்டியிடுகிறார் போலும்.
எவர் ஜனாதிபதியானாலும் மிக விரைவில் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் நாட்டில் கொந்தளிப்பான நிலைமை உருவாகும். அரசியல் காரணங்களுக்கான போராட்டங்களை அடக்குமுறை மூலம் கட்டுப்படுத்துவது சிலவேளை இலகுவாகலாம் ஆனால் பொருளாதார பிரச்சினைகளால் வெறிகொண்டு எழும் மக்களை கட்டுப்படுத்த அடக்குமுறையை பிரயோகித்தால் பெரும் அழிவிலேயே அது முடியும். எனவே, சர்வதேச நாணய நிதியம் கைகொடுக்கும் வரை தாக்குப் பிடிப்பதே புதிய ஜனாதிபதியின் முன்னுள்ள சவாலாகும்.
தமிழ்மிரர் 20/7/22 பக்கம் 6
Akurana Today All Tamil News in One Place