பர்தா அணிந்த மாணவிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படுகின்றது, ஆனால், இன்னும் உள்நாட்டில் பல காரண காரியங்களின் அடிப்படையில் சிறியதும் பெரியதுமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையே காண்கின்றோம்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை ஏற்பாடுகளை அரச கட்டமைப்பு சரியான முறையில் அமுல்படுத்தவில்லை என்பதையும், பிற மதங்கள், இனக் குழுமங்களைச் சேந்த மக்களின் உரிமைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத்தன்மையும் புரிதலும் சகோதர இன மக்களுக்கு அவசியம் என்பதையும் சில சம்பவங்கள் இன்னும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன

திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மண்டபத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, சமூக மட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு விவகாரமாக மாறியிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பியதையடுத்து, இப் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் பெறுபேறுகள் விடுவிக்கப்படவில்லை.

இதேவேளை, அதிபர் சேவை பரீட்சைக்குத் தோற்றிய 13 முஸ்லிம் பரீட்சார்த்திகளும் இதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது பெறுபேறுகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கே ஒருவித மன உலைசலை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

இலங்கையில் சட்டங்கள் அனைத்துமே எல்லோருக்கும் பொதுவானவை. இதனை எல்லா இனங்கள், மதங்களைச் சேர்ந்த மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஓர் அரபு நாட்டில் வாழ்வது போல இலங்கை போன்ற பல்லின நாடுகளில் வாழ இயலாது.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட பரீட்சைக்கு, போட்டிக்கு, நிகழ்வுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது. இதனைப் பின்பற்றியே ஆக வேண்டும். ஒரு தனிமனித உரிமை பாதிக்கப்படாத விடத்து, பொதுவான சட்ட நடைமுறைகளுக்குள் தமது கலாசாரம் அல்லது உணர்வு சார்ந்த விடயங்களைத் திணிக்க முற்படுவது கூடாது என்பது பொதுவாக அனைத்து இன மக்களுக்குமான அறிவுரையாகும்.

சமகாலத்தில், இலங்கையின் அரசியலமைப்பினாலும் இன்னபிற சட்ட ஏற்பாடுகளாலும் ஏராளமான தனிமனித உரிமைகள் குறித்துரைக்கப்பட்டுள்ளன. சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் யாராக இருந்தாலும், முதலில் அதனை நேரிய மனதுடன் விளங்கிச் செயற்பட வேண்டிய தேவை இன்னும் இருக்கின்றது என்பதையே தொடரும் விரும்பத்தகாத சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன

2024 ஜனவரியில் இடம்பெற்ற (2023ற்கான) உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களுள் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகளும் உள்ளடங்குவர். ஆனால், திருகோணமலையில் பரீட்சை எழுதிய 70 மாணவிகளின் பெறுபேறுகள் மட்டும்தான் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன

பர்தா இன்று பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் அணிகின்ற ஆடையாக இருக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் முஸ்லிம் மாணவிகள் திருகோணமலையில் மட்டும் பரீட்சைக்குத் தோற்றவில்லை. வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் காலி, மாத்தறையிலும் கூட பரீட்சைக்குத் தோற்றினார்கள். எல்லாப் பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் அணிகின்ற பர்தாக்கள் கிட்டத்தட்ட ஒரே விதமானவை. அதேவேளை, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்குச் செல்லும் முஸ்லிம் மாணவிகள் சில வரன்முறைகளைக் கொண்ட பர்தா அணிந்து தலையையும் உடம்பின் மேற்பகுதியையும் மூடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள

இந்நிலையில், காதுகளை மறைக்கும் விதத்தில் பர்தா அணிந்து வந்தார்கள் என்ற காரணத்திற்காகவே, திருகோணமலையிலுள்ள வேறு ஒரு பாடசாலையில், பரீட்சை எழுதிய சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 70 பேரின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் தரப்பில் கூறப்படுகின்றது.

பரீட்சார்த்தி என்ற வகையில் மாணவிகள் விதிமுறைகளைப் பேணுவது கட்டாயமாகும். ஒரு பரீட்சார்த்தியின் ஆள் அடையாளம் உறுதி செய்யப்பட்டதன் பின்னரே அவரை பரீட்சை மண்டபத்திற்குப் பரீட்சை எழுத அனுமதிக்க முடியும். ஆள்மாறாட்டம் உட்பட பரீட்சை ஒழுங்கு விதிகளை மீறுகின்றவர்களை பொலிஸில் ஒப்படைக்கக் கூட ஏற்பாடு உள்ளது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு முகத்திற்கு மேலதிகமாக காதுகள் முக்கியமானவை. அத்துடன், நவீன இலத்திரனியல் கருவிகளைக் காதுகளுக்குள் சொருகிப் பயன்படுத்தலாம் என்ற விடயமும் கருத்திற் கொள்ளப்படுவதுண்டு.

எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தின் படி தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் காதுகளுடனான முகத்தை முஸ்லிம் பெண்கள் காண்பிக்க முன்வர வேண்டும். முஸ்லிம் மாணவிகள் மட்டுமன்றி, ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற அறிவுரை ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கின்றது

இவ்வாறான பின்னணியிலேயே காதுகளை மூடிய பர்தா அணிந்து வந்தார்கள் அதனால், ஆளடயாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது என்று கூறி திருகோணமலையில் 70 மாணவிகளது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தின் 13 ஆசிரிய பரீட்சார்த்திகளது நிலையும் இதுதான். இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.

திருகோணமலை மாணவர்கள் முகத்தை முற்றாக மூடிய ஆடை அணிந்ததாகக் கூறப்படவில்லை. அத்துடன், இவர்கள் எல்லாப் பாடங்களுக்கும் தோற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அப்படியென்றால் அவர்களது ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றுதானே அர்த்தம்?

தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் மாணவிகள் விடாப்பிடியாக இருந்திருப்பார்கள் என்றால், அல்லது ஆளடையாளம் மேற்பார்வையாளர்களுக்குத் திருப்தியில்லை என்றால், அவர்கள் பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டிருக்க முடியாது. ஆனால், பரீட்சைக்குத் தோற்ற அனுமதித்த பிறகு, இப்போது பெறுபேறுகளை நிறுத்தி வைப்பதன் நியாயம் என்னவோ?

இந்த மாணவிகள் ஏதோ ஒருவகையில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியிருந்தால், அது பரீட்சை விதிமுறைகளின் மீறலாகும். இதனை மதத்தையோ கலாசாரத்தையோ காரணம் காட்டி சரி என வாதிட முடியாது. மறுபுறத்தில், அவர்கள் அடையாளத்தை வெளிப்படுத்திய பின்னரும் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்றால் அது அவர்களது உரிமை மீறலாகவே அமையும்.

திருகோணமலையில் ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் மட்டும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றவில்லை. திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களிலும் கொழும்பிலும் காலியிலும் கண்டியிலும் மாத்தறையிலும் யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் மாணவிகள் வழக்கம்போல தோற்றியுள்ளார்கள்.

அதேபோல், மேற்குறிப்பிட்ட பரீட்சை நிலையத்தில் உள்ள மாணவிகள் மட்டும் பர்தா அணிந்து பரீட்சைக்குச் சென்றதாகக் கூறவும் இயலாது. நாட்டின் எல்லா இடங்களிலும் முஸ்லிம் மாணவிகள் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான பர்தாவை அணிவதே வழக்கமாக உள்ளது. ஆனால், அங்கெல்லாம் இப்படியான சர்ச்சைகள் ஏற்பட்டதாகப் பதிவு செய்யப்படவில்லை.

அப்படியென்றால், திருகோணமலை மாணவிகள் விசேட வடிவிலான பர்தா அணிந்து வந்திருக்க வேண்டும் அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் காதுகளைக் காண்பிக்காமல் மேற்பார்வையாளர்களுடன் வாக்குவாதம் புரிந்து, ஒழுங்கு விதிகளை மீறியிருக்க வேண்டும்.

உண்மையில், பரீட்சை மண்டபத்தில் என்ன நடந்தது என்ற உண்மை நிலைவரம் நமக்குத் தெரியாது. ஆயினும், இது தொடர்பில் கடந்த நான்கு மாதங்களில் கல்வியமைச்சு தெளிவான விசாரணை ஒன்றை நடத்தி, அதன்படி பெறுபேறுகளை வெளியிட்டிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக மாறி இருக்காது.

எனவேதான், இதற்குப் பின்னால் வேறு காரணங்கள், இனப் பாகுபாடு சார்ந்த நோக்கங்கள் உள்ளனவா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திருமலையில் கலாசார ஆடை அணிந்த ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடசாலை ஒன்றில் பணி புரிவதைத் தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாடி வைத்த ஒரு மாணவனின் உரிமை பல்கலைக்கழகத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இப்போது மீண்டும் திருகோணமலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் எந்தப் பாகங்களிலும் இப்படியான ஒரு சிக்கலை முஸ்லிம்கள் எதிர்கொண்டிராத நிலையில் கிழக்கில் குறிப்பாகத் திருகோணமலையில் மட்டும் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறுவது கவனிப்பிற்குரியது.

கிழக்கு மாகாண அரச நிர்வாகமும் ஆளுநரின் நடவடிக்கைகளும் முஸ்லிம்களை வித்தியாசமாகக் கையாள்வதாக ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவமானது, கல்வித்துறையிலும் பாகுபாடும் சகிப்புத்தன்மையின்மையும், புகுந்து விட்டதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்த விவகாரத்திற்கு உடன் தீர்வு கண்டு பெறுபேறுகளை வெளியிடுவது மட்டுமன்றி, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அது எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைதல் வேண்டும்.

மொஹமட் பாதுஷா
“பர்தா அணிந்த பரீட்சார்த்திகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினை”
தமிழ் மிற்ரோர் பத்திரிகை – பக்கம் 04 (11-6-2024)

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters