வீட்டிலிருந்து வெளியேறியவர் வீட்டுக்குத் திரும்புவரா? என்ற சந்தேகம் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் வலுப்பெறத் தொடங்கிவிட்டது. அந்தளவுக்கு நாட்டின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. அதற்காக வீட்டுக்குள்ளே எந்நாளும் இருந்துவிடமுடியாது. உடல், உள ரீதியில் பல்வேறான நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
மர்மமாய் இறந்து கிடக்கும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கையில், தங்களுடைய உயிர்களைப் பறித்துக் கொள்வோரும் அதிகரித்துள்ளனர். இதற்கிடையே பழைய பகையைத் தீர்த் துக்கொள்வதற்காக, துப்பாக்கிப் பிரயோகங்கள், வாள்வெட்டுகள் பகிரங்கமாகவே அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம் நாட்டில் சட்டமில்லையென்பதை புடம்போட்டுக் காட்டிவிடும்.
குடும்பத்தைக் கொண்டு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ரீதியிலான நெருக்கடியால், குடும்பத் தலைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து மீண்டெழ முடியாதவர்களே, தவறான தீர்மானங்களை எட்டி விடுகின்றனர். வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்புவதை விடவும், உலகை விட்டே சென்றுவிடத் தீர்மானித்துவிடுகின்றனர். அதுதான் தவறான முடிவாகும்.
ஏனெனில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதன் ஊடாக, தன்னையே நம்பியிருக்கும் குடும்பத்தை அநாதையாக்கிவிடுகின்றீர்கள். தவறான தீர்மானத்தை எடுக்கும் உங்களைப் போன்ற திராணியற்றவர்களின் முடிவை, அக்குடும்பத்தினரும் எடுக்கக்கூடும். அதுவே, அடுத்தடுத்தவர்களின் மனங்களில் தொற்றிக்கொள்ளும். ஆகையால், சிரமத்தை எதிர்கொண்டு எதிர்ந்ச்சல் போடுவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும்.
மற்றவர்களின் அடி யொட்டி நடக்கும் எவருக்குமே பிரச்சினை வராது, புதுவழியில் பபணிப்போரின் வாழ்க்கை, மேடு, பள்ளங்கள், பிரச்சினைகளைக் கடந்தவையாக இருக்கும். புதுப்புது முயற்சிகளுக்கும் வித்திட்டுவிடும் என்பதை இனிமேலாவது கவனத்தில் கொண்டு, முன்னோக்கிப் பயணிக்க முயற்சிக்க வேண்டும்.
நெருக்கடியான காலகட்டத்தை முடி ச்சுமாறிகள், வழிப்பறிக் கொள்ளையர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டு இறாத்தல் பாண்களை அபகரித்துச் சென்றமை, பிள்ளைகளுக்காக வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்களை திருடிச்சென்றமை, இப்படி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால்,
தாங்களே விழிப்பாக இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி, கள்வர்கள், வழிப்பறிக் கொள்ளையர்களின் கண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு செல்வதை தவிர்ப்பதே நல்லது. அள்ளி அணிந்துகொண்டு வெளியே சென்று, வெறுமையான கழுத்துடனும் காயத்துடனும் வீட்டுக்கு வருவதை விடவும், வெறுமையான கழுத்துடன் வெளியே செல்வதே மேலானது.
ஒவ்வொன்றுக்காகவும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சில அங்காடிகளில் இறாக்கைகள் வெறுமையாகவே காட்சியளிக்கின்றன. கிடைப்பதை கொண்டு வாழவும், பலரும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர். போகின்ற போக்கைப் பார்க்குமிடத்து, நிலைமை இன்னுமின்னும் மோசமடையும்.
தூண்டி விடாமல் மறைத்துச் கொண்டு செல்லவேண்டும். எல்லா விடயங்களிலும் விழிப்பாக இருப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
(தமிழ் மிர்ரர் 9/6/2022 பக்கம் 6)
Akurana Today All Tamil News in One Place