இலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை செயல் தூதுவருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
கட்டாரில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு உடனடியாக தங்குமிட வசதிகளை செய்து கொடுக்குமாறு கட்டாருக்கான இலங்கை தூதுவருக்கு வெளியுறவுச் செயலாளர் ரசிநாத ஆரியசிங்க அறிவித்துள்ளார்.
தற்காலிக நடவடிக்கையான குறித்த விடயத்தை செயற்படுத்துமாறும் வெளியுறவுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டாரில் வசிக்கும் 1051 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 100,000 மேற்பட்ட இலங்கையர்கள் கட்டாரில் பணிபுரிவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் என குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால், எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, குவைட்டில் இருந்து வருகைத் தந்த பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து நாளை கட்டாரில் இருந்து வருகைத்தரவிருந்த விமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place