சவூதி அரசு தப்லீக் ஜமாஅத்தின் பணிகளுக்குத் தடைவிதித்து விட்டதென்ற செய்தி சமூக ஊடகங்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டதை அறிவோம். ஆனாலும் தீனுல் இஸ்லாம் விதைக்கப்பட்ட மண்ணிலிருந்து இப்படியொரு செய்தியா? வென அமைதி சமாதானத்தை ஆதரிப்போர் ஆச்சரியமடைகின்றார்கள். சாதாரண பொதுமக்கள் ஏன் தடுத்தார்கள்? எதற்காகத் தடை என்று? ஏதுமறியாது திகைப்படைகின்றார்கள். எனினும் கடந்த வார விடிவெள்ளியில் அவ்வாறான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் வெளிவரவில்லை என்ற செய்தியைக் கண்டு நாம் ஆறுதல் அடைந்தோம்.
இப்பணியின் புனிதத் தன்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றலில்லாதோர் இதனை சரிகண்டு வரவேற்கின்றார்கள். வேறு சிலர் தப்பவிப்பிராயத்துடன் குறைகளைத்தேடி, குற்றங்களைச் சுமத்தி இப்பணியில் ஈடுபடும் அப்பாவிகளை பகைவர்கள் போல் பார்க்கின்றார்கள். இவ்வாறானவர்கள் தடைச் செய்திக்குப் பச்சைக் கொடி காட்டி, அவற்றைப் பகிர்ந்து, பரபரப்பாய்ப் பேசி பழிதீர்த்து பரவசமடைகின்றார்கள்.
ஆனால் தப்லீக் பணிக்காக தங்களை அர்ப்பணித்து தியாகம் செய்து தீன் பணியாற்றுகின்ற எவரும் கவலையடையவுமில்லை, கதிகலங்கிப் போகவுமில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கு மென்ற நம்பிக்கை கொண்டவர்கள் அணுவளவும் சோர்ந்து விடவில்லை. ஆவேசம் கொள்வதோ, ஆர்ப்பாட்டங்கள் செய்வதோ, போர்க்கொடி தூக்குவதோ இப்பணியாளர்களின் பாதையல்ல. மாறாக அதிகாலை தஹஜ்ஜத் தொழுது துஆ, இஸ்திஃபார் கவலையுடன் கையேந்தி கருணையாளனிடம் முறையிட்டு கண்ணீர் வடித்து அமைதி தேடுவதே ஆயுதமாகுமென்று நம்புகின்றவர்கள்.
தஃவாப் பணியின் சாதக பாதகம்
தப்லீக் ஜமாஅத் சர்வதேச ரீதியாக செல்வாக்குச் செலுத்துகின்ற ஓர் அமைப்பாகும். முழு உலகிலும் சுமார் 160 நாடுகளில் இப்பணி நடைபெறுகின்றது. இதன் அங்கத்தவர்களாகவும், ஆதரவாளா்களாகவும் சுமார 40 கோடி மக்கள் இப்பணியை முன்னெடுத்து செல்கின்றார்கள்.
இவர்கள் பணம் சேகரித்தல், பணப் பரிமாற்றம், வங்கி வைப்புக்கள் எதுவுமின்றி சொந்த பணத்தில் இயங்குகின்றார்கள். தேவைக்கேற்ப செலவு செய்து சமமாகப் பிரித்து கையிருப்பில்லாமல் நடமாடும் ஈமானிய உழைப்பாளர்கள். முழு உம்மத்தினருக்கும் அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒழுக்கமாண்பு, உபகாரம் செய்யும் தன்மை, அனைவரிடமும் சகோதரத்துவம், அன்பு வேண்டி பிரார்த்திப்பவர்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம், அரசியல் தலையீடுகளை விட்டும் ஒதுங்கிக் கொள்வர்.
தப்லீக் ஜமாஅத்திற்கு சவூதியில் தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி மற்றும் இலங்கையில் தப்லீக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் விரோதம் பாராட்டுபவர்களும் இவ்வியக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தோற்றம், வளர்ச்சி, தலைமைத்துவம் பற்றி அறிந்து கொள்ள சந்தாப்பம் கிடைத்துள்ளது.
பாதகத்தை நோக்குவோமாயின் சவூதியில் இப்பணி பல தசாப்தங்களாக குறிப்பிட்டுக் கூறத்தக்கதாக நடைபெறவில்லை. எனவே அங்கு தடை செய்வதால் சவூதியில் பாதிக்கப்படும் தப்லீக் பணியாளர்கள் பெரிதாக இல்லை. மர்கஸ், மஹல்லாக்கள் என்று குறிப்பிட்டு கூறுமளவுக்கு ஒன்றுமில்லை. அங்கு இந்தப் பணிக்கான கேந்திர நிலையமுமில்லை, இதைத் தாங்கி முன்னெடுப்போரும் குறைவு.
ஆனால் தற்போது சவூதியில் பாவத்தின் வாசல் திறக்கப்படு வதையும் ஆண், பெண் கலந்த பொழுது போக்குகளும் போட்டி போட்டுக் கொண்டு சவூதிக்குள் நுழைந்து கொண்டிருப்பது கவலையான விடயமாகும். குறிப்பாக ஏராளமான சினிமா கொட்டகைகள், இரவு விடுதிகள், கஸினோ சூது விளையாட்டுக்கள், இசைக் கச்சேரிகள், பிரபல பாடகர்கள், .நடிகர்களின் நடனக் காட்சிகள் என அடுக்கிச் செல்லலாம்.
தடை தாண்டிச் சென்ற தீன் பணி
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஈமானியப் பணிக்கு நம்றூத் கொடுங்கோலன் தடைவிதித்து நாற்பது தினங்கள் நெருப்புக் கிடங்கில் நபியை எரித்தான். நபிக்கு எந்த ஆபத்துமில்லை. அல்லாஹ் பாதுகாத்தான் தீன்வளர்ந்தது. மூஸா (அலை) அவர்களுக்கு பிர்அவ்ன் தடை போட்டுத் தடுத்தும், துன்பமிழைத்தும் அவனே அழிந்தான். தீன் வளர்ந்தது. மக்கத்து மண்ணிலே மாநபி (ஸல்) அவர்களுக்கு அபு ஜஹ்ல், உத்பா, சைபா, கொடியோர்கள் கொடுமை செய்து தடைகளை ஏற்படுத்திய போதும் கொடியவர்கள் அழிந்தார்கள். கோமான் நபி பாதுகாக்கப்பட்டு இஸ்லாம் உலகமெலாம் பரவியது.
வீரர் உமர் வாளேந்தி வள்ளல் நபியைக் கொல்ல வந்து கலிமாவை ஏற்று கண்ணியமடைந்தார்கள். தடைகளைத் தகர்த்தெறிவதும், தாக்குப்பிடிக்க வைப்பதும் அல்லாஹ்வின் முடிவிலுள்ளது. ஆனால் எதிர்ப்புகளும், வெறுப்புக்களும், தடைகளும்தான் தக்வா பணிக்கான உரமும் ஊக்கமுமாகும்.
என்.எல்.எம். மன்சூர், ஏறாவூர் – விடிவெள்ளி 23/12/2021
Akurana Today All Tamil News in One Place