சவூதியில் பாரிய இசைத் திருவிழா 7 இலட்சம் பேர் பங்கேற்பு

சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நான்கு நாட்களாக இடம்பெற்ற பாரிய இசைத் திருவிழாவில் 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021 வருடத்தை வழியனுப்பும் நோக்கிலும் 2022 ஐ வரவேற்கும் வகையிலும் நடைபெற்ற இந்த இசைத் திருவிழாவில் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

“நான்கு நாட்களாக இடம்பெற்ற இந்த இசைத் திருவிழாவில் 732,000 பேர் கலந்து கொண்டனர்” என சவூ தியின் பொது பொழுதுபோக்கு அதிகார சபையின் தலைவர் துர்கி அல் ஷெய்க் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறான ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் ரியாதில் நடைபெறவில்லை. பாரிய சனக் கூட்டம், இசை,வி.ஐ.பி. அறைகள், வழக்கத்துக்கு மாற்றமான ஆடைகள் என அனைத்துமே புதிய அனுபவம்’ என இந் நிகழ்வில் பங்கேற்ற பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு விதித்திருந்த தடையை 2017 இல் நீக்கியது. இதனைத் தொடர்ந்து 2019 முதல் வருடாந்தம் பாரிய இசைக் கச்சேரிகள் நடாத்தப்படுகின்றன. இந் நிகழ்வுகளில் இளைஞர், யுவதிகள் ஆண் பெண் வேறுபாடின்றி பங்கேற்கவும் பாடவும் ஆடவும் அனுமதிக்கப்படுகிறது.

பழமைவாத, இறுக்கமான நாடு எனும் பெயரை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை சவூதியின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நடைமுறைப்படுத்தி வருகிறார். அத்துடன் பாரம்பரிய எண்ணெய் உற்பத்தியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்திலிருந்து விடுபட்டு, சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகியவற்றை சவூதி இப்போது வருமான மீட்டும் துறைகளாக அடையாளப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியிலேயே இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இது குறித்து சவூதி பிரஜைகள் பலரும் தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். இரு புனிதத் தலங்களைக் கொண்டுள்ள இந்த தேசத்தில் இவ் வாறான நிகழ்வுகள் நடப்பது எந்தளவு சாத்தியம் ” என இந்த இசை நிகழ்வில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடனமாடும் வீடியோ காட்சியை வெளியிட்டு டுவிட்டரில் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். (விடிவெள்ளி 23/12/21)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter