கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தை ஆகியோர் அவரை தாக்கியுள்ளதாகவும் அதனால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் தாயார் அவரை அயலவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அங்கு குறித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
கம்பளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்த 14 வயதான குறித்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறியதந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (22) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிரு செய்திகள் –hirunews.lk– (2021-12-22 12:43:45)
Akurana Today All Tamil News in One Place