உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையின் விசேட சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்கள் மீது சக கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த நால்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிய முடிகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுமார் 9 பேர் இச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்களுக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாகவும் உடனடியாக இவர்களை வேறு பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அவர்களது குடும்பத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் எனக் கூறியே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தடிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஒருவரின் தாடை எலும்புகள் மற்றும் பல் என்பன சேதமடைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விடிவெள்ளி பத்திரிகை 16/12/20 Pg-01
Akurana Today All Tamil News in One Place