கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து சீல் வைக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவுக்கு அமைவாக தற்போது வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருக்கும் எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் திரும்பப் பெறவுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 430 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பாலகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல எரிவாயு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தேவைகளுக்கு இணங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை நேற்று ஆரம்பித்தது.
புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
-வீரகேசரி- (2021-12-08 11:14:23)
Akurana Today All Tamil News in One Place