ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்கப் போதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;
“ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் நெருங்கிய தருணத்தில் அவர்கள் எடுத்த தீர்மானத்தின் பலாபலனையே தற்போது அனுபவிக்கின்றார்கள்.
தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொலைப்பேசி சின்னத்தில் எமது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகின்றோம். எமது கட்சிக்கு என்றே தனிப்பட்ட கொள்கைத்திட்டமொன்று இருக்கின்றது.
எம்மிடம் ஏனைய கட்சிகளைப்போன்று தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடுவதற்கு பணப்பலம் இல்லாத போதிலும், நாட்டின் ஜனநாயக கொள்கையைப் பாதுகாப்பதற்காக மக்கள் எமக்கு ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
மக்களது எண்ணத்தை நிறைவேற்றுவதுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பலம் பொருந்திய கட்சியாக முன்னேரி செல்வதே எமது நோக்கமாகும்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஊடகங்கள் எமக்கு கொடுத்திருந்த இடத்தை அனைவரும் அறிவீர்கள்.
இந்நிலையில் அனைவருக்கும் சம இடத்தை பெற்றுக் கொடுத்துச் செயற்படுமாறு ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் எமக்கு அக்கறையில்லை. தொலைப்பேசி சின்னம் தான் எங்களது சின்னம். எமக்கென்று தனிப்பட்ட கொள்கைத்திட்டம் இருக்கின்றது.
தொலைப்பேசி சின்னத்திற்கும், எமது தனித்துவம்மிக்க கொள்கை திட்டத்திற்குமே மக்கள் ஆணையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதனால் சிறிகொத்தாவின் பொறுப்பையோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையோ பொறுப்பேற்க நான் விரும்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியே தற்போது மக்கள் தெரிவு செய்துள்ள மாற்றுக் கட்சி.
அதனால், கட்சியின் கொள்கைக்கு மதிப்பளித்துச் செயற்படுபவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் சரி அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கு வெளிப்படைத் தன்மையுடன் வாய்ப்பளிக்கத் தயாராகவே உள்ளோம்..” என கூறியுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place
