உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பல உண்மைகளை மறைக்க முயற்சி – சம்பிக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோருவதில் நாம் ஒருபோதும் மௌனிக்கப் போவதில்லை. தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதல்களை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி , 2010 ஆம் ஆண்டு வரை சஹ்ரான் உள்ளிட்ட தௌஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினால் ஊதியம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் என்பவையும் எதிர்வரும் அரசாங்கத்தின் மூலமாவது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது.

எனினும் அதில் பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். 

ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்புக்களின் தலைவர்கள் அவர்களின் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை. அவ்வாறிருக்கையில் சஹ்ரான் எவ்வாறு பிரதான சூத்திரதாரியாக இருப்பார் ?

எனவே கடந்த 2010 ஆம் ஆண்டு வரை சஹ்ரான் உள்ளிட்ட தௌஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு ஊதியம் வழங்கியமை , 2007 இல் கிழக்கில் காத்தான்குடி பிரதேசத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட ரி -56 ரக துப்பாக்கிகள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள பெறப்படாமை , உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தாக்குதல்களை மேற்கொள்ளவிருந்த தாக்குதல்தாரி தெஹிவளைக்குச் சென்று குண்டை வெடிக்கச் செய்ய முன்னர் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவரை சந்தித்ததாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் சாட்சி வழங்கியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் பல விடயங்களை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் அரசாங்கமேனும் இதன் உண்மையான பின்னணியை கண்டறிய வேண்டும். 

தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி , இவ்வாறான உண்மைகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான நியாயத்தை கோருவதில் நாம் ஒருபோதும் மௌனிக்க மாட்டோம் என்றார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter