இராஜாங்கனை பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தவிர நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11 , 12 மற்றும் 13 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நாளை திங்கட்கிழமை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. கொரோனா வைரஸ் பரவலினால் சுமார் 3 மாத காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அதற்கமைய கடந்த வாரம் கல்வி அமைச்சு அறிவித்தததைப் போன்று நாளை தரம் 11 , 12 மற்றும் 13 மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இராஜாங்கனை பகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்காமலிருப்பதற்கும் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று வகுப்புக்களுக்கும் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் போது சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் பிரதி அதிபர்களும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை முதல் 31 ஆம் திகதி வெள்ளக்கிழமை பாடசாலைக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது தேர்தலுக்கான ஆயத்தங்கள் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.
தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்யும் போது கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் இதற்காக உதவி தேர்தல் ஆணையாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place