மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்கும் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் அற்ற மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்புமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , பொது போக்குவரத்தினை பயன்படுத்தும்போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமை கவலைக்குரியதாகும்.
எனவே, இது தொடர்பில் பெற்றோர் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இன்று திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் சகல பாடசாலைகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவுபடுத்துகையில் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
சகல பிரதேங்களிலும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களின் பொறுப்பின் கீழுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு அமைய மாணவர்களை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பது தொடர்பில் பெற்றோர் விசேட அவதானம் செலுத்தவேண்டும்.
எனவே, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் அற்ற மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும்போது அவர்களுக்கென பிரத்தியேகமான தண்ணீர் போத்தல் உள்ளிட்டவற்றை பெற்றோர் வழங்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்கள் மிகவும் பாதுகாப்பாக காணப்பட்டாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது அவை கேள்விக்குறியாகின்றன.
இது கவலைக்குரியதாகும். பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
எவ்வாறிருப்பினும், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிமுறைகளுக்கமைய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர் அல்லது மாணவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.
இதேவேளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டள்ள நிலையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பொது சுகாதார பரிசோதகர்கள் துரிதமாக செயற்பட்டு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிற்கு அறிவிப்பார்கள் என்றார்.
-வீரகேசரி பத்திரிகை- (எம்.மனோசித்ரா)
Akurana Today All Tamil News in One Place