இலங்கையில் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை உருவாக்குவதே ஸஹ்ரானின் நோக்கமாக இருந்தது

ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினருமே உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் குற்றவாளிகள். அவர்கள் இரு தரப்பையும் சிறையில் அடைக்க வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25)  ஏப்ரல் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்புலம் உள்ளது. அரசியல் நோக்கம் உள்ளது. தாக்குதல்களை நடத்தியது யார்? அவர்களின் பின்புலத்தில் யார் யார் இருந்தனர் என்பதை மாத்திரம் ஆய்வுக்கு உட்படுத்துவது போதுமானதல்ல.

ஸஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைக் கருத்துகளை உருவாக்கியது உண்மைதான். அவர் இலங்கையில் இஸ்லாமிய இராஜ்ஜியம் ஒன்றை உருவாக்குவது அவருடைய நோக்கமாக இருந்தது.

அது நீண்டகால வேலைத்திட்டமாகும். அவ்வாறு நீண்ட வேலைத்திட்டமாக அது இருக்கின்ற சந்தர்ப்பில் பாதியில் அவர் குண்டுத்தாக்குதல்களை நடத்தி உயிரிழந்தது ஏன்?. அதற்கான பதிலை நாம் கண்டறிய வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதன் ஆரம்பத்தை தேடிக்கொள்ள முடியாது.

சர்வதேச சதித்திட்டம் இதன் பின்புலத்தில் உள்ளதாக கர்தினால் கூறியுள்ளார். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் அவ்வாறு எதுவும் இல்லை. இந்தச் செயற்பாடுகள் ஆரம்பமான காலத்தில் ரணில் விக்கிரமசிங்கதான் பொலிஸுக்கு பொறுப்பாக இருந்தார். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் அவரது பெயர் இல்லை. அது தொடர்பில் கவலையடைகிறேன். பொலிஸ் செயற்பாடுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அத்தருணத்தில் நாம் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருந்தோம்.

கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டனர். ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போடும் தேவையே அவர்களுக்கு இருந்தது. இல்லாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாத ஒரு சூழலை உருவாக்குவது அவர்களது எண்ணமாகும். நாட்டில் பாரிய கலவரமொன்றை ஏற்படுத்தி எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திட்டு ஏகாதிபத்தியத்தை உருவாக்க முற்பட்டனர். அதனால்தான் ஸஹ்ரான் ஊடாக குண்டுத் தாக்குல்களை நடத்தினர்.

ஸஹ்ரான் நீண்ட காலத் திட்டத்தில் இஸ்லாமிய இராஜ்ஜியமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் செயற்பட்டிருந்தார். ஆனால், அத்தருணத்தில் அவருக்கு பின்புலமாகவிருந்த சர்வதேச சக்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்துமாறு கட்டளையிட்டதால்தான் அவர் தாக்குதல்களை நடத்தினார்.

உலகில் எமக்கு அடிப்பணியாத நாடுகளையும் சீரழிப்பதன் பின்புலத்தில் அமெரிக்கதான் உள்ளது. எம்.சி.சி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் பின்புலத்தை உருவாக்க எமது நாட்டில் பாரிய கலவரமொன்றை உருவாக்கி தமது பலத்தை நிறுவுவதற்கே ஸஹ்ரானின் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்மூலம் ஜனநாயகமாக நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தலை நிறுத்த முயற்சித்தனர்.

அன்று இருந்த ஐக்கிய தேசிய கட்சியினரும் இன்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருமே இந்தத் தாக்குதல்களின் குற்றவாளிகள். அவர்கள் இரு தரப்பையும் சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter