மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் உடலில் , நீண்ட நாட்களாக காணப்பட்ட காயம் ஒன்றில் கிருமி உட்புகுந்தமை காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாக மட்டகளப்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி மர்மமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்தார். 12 வயதுடைய சிறுமியே உயிரிழந்திருந்ததுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிறுமியின் மரணத்தில் தொடர்ந்தும் சந்தேகம் காணப்பட்ட நிலையில் , சடலம் தொடர்பான மரண மற்றும் பிரேத பரிசோதனை மட்டகளப்பு வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய சிறுமியின் உடலில் நீண்ட நாட்களாக காணப்பட்ட காயம் ஒன்றில் கிருமிகள் உட்புகுந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் தாயார் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதுடன் சிறுமி தாயாரின் சகோதரியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக கொலைச் சட்டவிதிகளின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். -Metro News-
Akurana Today All Tamil News in One Place