ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவிக்கிறது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போது அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் வழமைக்குத் திரும்பி வருவதால், ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் பத்தரமுல்லையிலுள்ள தலைமைக் காரியாலயத்துக்கு அல்லது தென் மாகாண காரியாலயத்துக்கு வருகை தருவதாக இருந்தால், திகதி மற்றும் எண்ணை முன்பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தச் சேவையை பிரதேச செயலகத்தின் அடையாள அட்டைப் பிரிவைக் குறிப்பிடுவதன் மூலமோ அல்லது 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, பொதுச் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் நபர்கள், கிராம சேவகர் மூலம் தங்கள் விண்ணப்பங்களை தமக்குரிய பிரதேச செயலகத்தின் தேசிய அடையாள அட்டைப் பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியும் என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் திணைக்களத்தால் பெறப்பட்டதும், தேசிய அடையாள அட்டை அச்சிடப்பட்டு பதிவுத் தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place