இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் உள்ளது. அவ்வாறிருக்கையில் புர்காவை தடைசெய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையுமே தவிர, அவை தணியப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிபீடமேறியது. எனினும் அவற்றை நிறைவேற்ற முடியாததன் காரணமாகவே இப்போது புர்காவை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம் உள்ளது. எனவே புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும்.
அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும். அரசாங்கத்தின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை என்று குறிப்பிட்டார்.
அதேவேளை புர்கா என்பது மதரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோது அதற்குப் பதிலளித்த முஜிபுர் ரகுமான்,
அதுகுறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது. அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும் என்று குறிப்பிட்டார்.
Akurana Today All Tamil News in One Place