நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க முடியாது என்று கூறுகின்ற அஸாத் சாலிக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் சட்டத்திற்குத் தன்னால் மதிப்பளிக்க முடியாது என்றும், முஸ்லிம் சட்டத்தை மாத்திரமே தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அஸாத் சாலி கூறியிருக்கிறார். இதன்மூலம் அவர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வாழும் மக்களுக்கும் அவருடைய அடிப்படைவாதப்போக்கை எதிர்ப்போருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறார். நாமனைவரும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் கூட, அஸாத் சாலி போன்றவர்கள் இன்னமும் கற்கால யுகத்திலேயே வாழ்கின்றார்கள்.
நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவானதொரு சட்டமே பிரயோகிக்கப்பட வேண்டும். மாறாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்கமுடியாது. இன, மத அடிப்படையில் ஒவ்வொரு சமூகப்பிரிவினருக்கும் வெவ்வேறு சட்டம், நீதிமன்றம், கல்விமுறை என்பவை அவசியமல்ல. அதன் விளைவாக ஒவ்வொரு இன, மதப்பிரிவினரும் தத்தமது கலாசாரம், பாரம்பரியம், தனித்துவம் ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு எவ்வித தடைகளும் ஏற்படப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். –Metro–
Akurana Today All Tamil News in One Place