மாணவர்கள் கணினியில் தொடர்ந்து பார்வையை செலுத்தி வருவதன் காரணமாக பார்வைக் கோளாறுக்கு ஆளாகி நாள் ஒன்றுக்கு 20-30 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அதனால் ஒன்லைனில் படிக்கும் மாணவர்கள் 20 நிமிடத்துக்கு ஒருமுறையேனும் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என மாத்தறை பெரிய வைத்தியசாலை கண் சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் பிரியங்க இத்தவெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த காலப் பகுதியில் அதிகமான மாணவர்கள் வாந்தி, மயக்கம், கண் நோவு, கண்களில் இருந்து கண்ணீர் வடிதல் போன்ற நோய் அறிகுகளுடன் தனிப்பட்ட ரீதியிலும் அரச வைத்தியசாலைக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகை தருகின்றார்கள். இவர்கள் அனைவரிடமும் ஒன்லைன் மூலம் படிக்கின்றீகளா என நான் கேட்கும்போது அதற்கு ஆம் என்றே பதில் அளிக்கின்றார்கள்.
எமது கண்கள் ஒரு விடயத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு பழக்கப்படவில்லை. தற்காலத்தில் மாணவர்கள் மணித்தியால கணக்கில் ஒன்லைன் முறையிலான கல்வியில் ஈடுபட்டு வருகின்றார்கள். கணணி அல்லது கையடக்கத் தொலைபேசியின் திரையை தொடர்ச்சியாக பார்ப்பதன் காரணமாக பார்வை கோளாறுகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.
இந்த காலப்பகுதியில் என்னிடம் சிகிச்சைக்கு வரும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களில் 60 சத வீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.
அத்துடன் சிறுவர் கண்சிகிச்சை நிலையத்துக்குவரும் பிள்ளைகளில் 80 சத வீதத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த நிலையை காணக் கூடியதாக உள்ளது. இது நல்ல நிலைமையல்ல. இந்த நோய் அறிகுறியுடன் சில பிள்ளைகளின் செயற்பாடுகளும் மாறி இருக்கின்றன. அவர்களுக்கு வழமைக்கு மாறாக அதிகம் கோபம் ஏற்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலையில் ஒன்லைன் கல்வி இடம்பெறவேண்டும். என்றாலும் இதுதொடர்பாக அனைவரும் அறிந்திருக்கவேண்டும். மேற்கத்திய மருத்துவத்தில் இதற்கு கணினி பார்வை நோய்க்குறி என்றே தெரிவிக்கின்றனர்.
அதனால் ஒன்லைன் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் கணினியை அல்லது கையடக்கத் தொலைபேசியை தொடர்ச்சியாக பார்க்காமல், 20நிமிடத்துக்கு ஒரு முறை 20 செக்கன்கனுக்கேனும் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் இது தொடர்பில் அறிந்துகொண்டு மாணவர்களுக்கு அதன் பிரகாரம் ஓய்வு வழங்க வேண்டும். அத்துடன் ஒன்லைனில் படிக்கும் முறையை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
Akurana Today All Tamil News in One Place