
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படவிருந்த நிலையில், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு முன்பாக பன்றிகளின் தலைகளை இனந்தெரியாத நபர்கள் தொங்கவிட்டுள்ளனர்.
மீரிகமை வீதி, மைமாகொடை பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான மூன்று கடைகளின் முன்பாக இவ்வாறு பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு சென்ற இனந்தெரியாத குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடைகளை மூடவேண்டும் என்று கூறி அதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை கடை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் கடையின் முன்பாக பன்றின் தலை தொங்கவிடப்பட்டுள்ளதாக ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். கடை உரிமையாளர்கள் அதனை பார்க்கச் சென்றபோது மூன்று கடைகளின் வாயில் கதவுகளில் பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place