பிரதமரை சந்தித்து தீர்வு காண பள்ளி நிர்வாகம் முயற்சி
நீண்ட காலமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிவாசலின் ஆவணங்களை விரைவில் கையளிக்குமாறு தம்புள்ளை மாநகர ஆணையாளர் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபையை கடிதம் மூலம் கோரியுள்ளார். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை இது தொடர்பில்
நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இவ்விவகாரம் வக்பு சபையின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் மாத்தளை மேயர் ஜாலிய ஓபாதவை ‘விடிவெள்ளி’ வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
‘தம்புள்ளை புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள பள்ளிவாசல் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். இத்தீர்மானம் பள்ளிவாசல் நிர்வாகம், அப்பகுதி பன்சலைக்குப்பொறுப்பான மதகுரு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் என்போருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே தம்புள்ளை பள்ளி வாசலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாற்றுக்காணி தம்புள்ளை வர்த்தக மையத்தை அண்மித்துள்ளதால்
மக்கள் வாழும் பிரதேசமொன்று இனங்காணப்படும் என்றார்.
தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அப்பகுதி ரங்கிரி ரஜமகா விகாரையைச் சேர்ந்த பௌத்த குருவின் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டது. பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமியில் அமைந்துள்ளதால் அப்பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்தும் அகற்றப்படவேண்டும் என குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த 8 வருடங்களாக இப்பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது சாத்தியப்படவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இப்பள்ளிவாசலை மாற்றிடத்தில் நிர்மாணிப்பதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் 20
பேர்ச் காணி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
என்றாலும் தம்புள்ளை பிரதேசத்துக்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் சிலர் அக்காணி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Akurana Today All Tamil News in One Place