மஞ்சள் இறக்குமதிக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் கோடிக்கணக்கான லீற்றர் மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதமாக அரசாங்கம் கூறினாலும் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 20 லட்சம் லீற்றர் எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான லீற்றர் விஸ்கி, பிராந்தி, பியர் மற்றும் வைன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பொய்களை கூறி இந்த அரசாங்கம் செல்கின்றது. எத்தனோல் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதாக அரசாங்கம் கூறியது.
ஆனால், கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை 20 லட்சம் லீற்றர் எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மாடு அறுப்பு தடை, எத்தனோல் இறக்குமதிக்கு தடை, ஆடம்பர பொருட்கள் இறக்குமதி செய்ய தடை. ஆனால், விஸ்கி, பிராந்தி, பியர், வைன் போன்ற மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் மதுவரி வருமானம் 8 ஆயிரத்து 817 மில்லியன் ரூபாய். ஜூலை மாதம் மதுவரி வருமானம் 13 ஆயிரத்து 557 மில்லியன் ரூபாய்.
மாற்றம் மகிழச்சியா என்று இவர்களிடம் கேட்க வேண்டும். மதுவரி வருமானம் 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இறக்குமதி தடைக்கு பின்னர் 7 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரத்து 760 லீற்றர் பியர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
68 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரத்து 400 லீற்றர் வைன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 13 கோடியே 61 லட்சத்து 5 ஆயிரத்து 220 லீற்றர் விஸ்கி மற்றும் பிராந்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் விரும்பியதை செய்கின்றது. விரும்பாததை செய்வதில்லை எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place