உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கில், 14ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள மெளலவி ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்ளிட்ட பல நோய் நிலைமைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகள் அவரை நேற்று முன் தினம் (25) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் அவர் இவ்வாறு சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சுமார் 18 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கில் ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வழக்கில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ள சட்ட மா அதிபர் இணங்கிய நிலையில், தண்டனை சட்டக் கோவையின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை, விரைவான விடுதலை கருதி 11 பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத கால சிறைத் தண்டனையை அளித்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ரஷீத் மொஹம்மட் இப்ராஹீம் அல்லது இப்ராஹீம் மெளலவி அல்லது இப்ராஹீம் சேரும் ஒருவராவார்.
இவ்வாறான நிலையில், கொழும்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் உள்ள வழக்கு காரணமாக அவர் விளக்கமறியல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது._
(எம்.எப்.எம்.பஸீர்) – விடிவெள்ளி இதழ் 27/10/2022
Akurana Today All Tamil News in One Place