பல்வேறு வேறு நெருக்கடிகளால், நாட்டு மக்கள் அளவுக்கதிகமான தியாகங்களை ஏற்கெனவே செய்துவிட்ட நிலையிலும், “நாட்டின் நிலைமை இன்னும் மோசமடைலாம்; மக்கள் இன்னும் தியாகங்களைச் செய்ய, தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்ற தோரணையில் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்றது.
பெரும் பொருளாதார நெருக்கடியும் அதனால் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டு, மக்கள் வீதிக்கு இறங்கிய பிறகு, அதாவது இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று உணர்ந்த பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதன்முதலாக இவ்வாறான அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இப்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதேபாணியில் “மக்களைத் தயாராக இருக்குமாறு” கோரும் அறிவிப்புகளை தொடர்ச்சியாக விடுத்துக் கொண்டி ருக்கின்றார். அமைச்சர்கள் சிலரும், மக்களைப் பயங்காட்டும் கதைகளைக் கூறி வருகின்றனர்.
நாட்டின் யதார்த்த நிலையை, மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்வது ஒரு விதத்தில் நல்லதுதான். எனவே, மக்கள் தங்களை முன்கூட்டியே பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள உதவும் என்பதில் நியாயங்கள் உள்ளன.
ஆனால் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக பல தியாகங்களைச் செய்து விட்டார்கள். பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டு விட்டார்கள். வாழ்வாதார நெருக்கடி, முக்கால்வாசி இலங்கையரின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், இன்னும் இழப்பதற்கும் தியாகங்களைச் செய்வதற்கும் மக்களிடம் என்ன இருக்கின்றது? எந்த நெருக்கடியையும் கிஞ்சித்தும் கூடத் தீர்த்து வைக்காமல், இன்னுமின்னும் மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் நியாயம் என்ன?
ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நிறையச் சொத்துச் சேகரித்து வைத்துள்ளனர். டொலர் கபளீகரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இவ்வாறிருக்கையில், இவர்கள் இன்னும் அனைத்து சுகங்களோடும் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்க மக்கள் மட்டும்தான் தியாங்களைச் செய்ய வேண்டும் என்பதன் உள்ளர்த்தம் என்ன?
உண்மையில், இவ்வாறான அறிவித்தல்கள் ஊடாக அரசாங்கம் மக்களை முன்கூட்டியே பலப்படுத்துகின்றதா? அல்லது உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி, தமது இயலாமைகளை மறைக்க முயல்கிறதா என்ற பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இலங்கை மக்களுக்கு .துன்பகாலம் பிறந்தது. வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் தள்ளப்பட்டனர்: இந்த நெருக்கடிகள் அரசியல்வாதிகள், செல்வந்தர் அல்லாத ஒவ்வொரு குடும்பத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஒரு வருடத்துக்கு முன்னறே, நாட்டில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி விட்டது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக வரிசை யுகம் நீடித்து வருகின்றது. எல்லாப் பொருட்களுக்கும் 100, 200 சதவீதத்தால் விலை அதிகரித்துள்ளன.
பொருட்களுக்காக வரிசையில் காத்துநின்ற பலர், அவ்விடத்திலேயே உயிரிழந்தார்கள். ஏரிபொருட்களுக்காகவும் ஏரிவாயுவுக்காகவும் வரிசையில் நிற்கின்ற தலையெழுத்தை அரசாங்கம் மாற்றியமைக்கவில்லை.
நாட்டை ஆள்வதில், கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் படுதோல்வி கண்டிருக்கின்றது. அதன் தாக்கம் ஒவ்வொரு வீட்டிலும் உணரப்பட்ட பிறகுதான், மக்கள் போராட்டம் வெடித்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக சர்வசாதாரண மக்கள் கூட, குரலை உயர்த்திப் பேசியதற்கான காரணம், வெளிநாட்டு சதியல்ல; அவர்கள் பட்ட கஸ்டங்களின் வெளிப்பாடு ஆகும்.
“அப்படியான பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படாது; நாங்கள் அந்த நிலைமைக்கு இடமளிக்க மாட்டோம்” என்று, எப்போதும் போல அரசாங்கம் ‘கோயாபல்ஸ்’ கதைகளைக் கூறிக் கொண்டே வந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் எல்லா பூசணிக்காய்களும் வெளியில் வந்து விழுந்தன. அந்தத் தருணத்திலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார்.
அவர், சிறந்த நேர்மையான ஆட்சியாளரா என்பதில், மக்களுக்குப் பல வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. ராஜபக்ஷ நிழல் ஆட்சியின் இயக்குநராகவே அவர், இருப்பார் என்பதும் பேசப்பட்ட விடயம்தான்.
இருப்பினும். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வாதார அவலத்தைப் போக்கும் ஆற்றலைக் கொண்டவர் என்பதற்காகவே, ரணில் விக்கிரமசிங்கவை மக்கள் அங்கிகரித்துள்ளனர்.
இருப்பினும். ராஜபக்ஷ குடும்பம், இலங்கையை கொண்டு வந்து நிறுத்தியுள்ள இடத்தில் இருந்து, நாட்டை மீட்டெடுப்பது என்பது, அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
எவ்வாறாயினும், மக்கள் அன்றாடம் படுகின்ற அவதிகளைக் குறைப்பதற்கு, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதுடன். தட்டுப்பாட்டு நிலைமைகளுக்கும் வரிசை யுகத்துக்கும் முடிவுகட்ட வேண்டும்.
மக்கள் இன்று படுகின்ற அவதியைப் பார்க்கின்ற போது, உத்தேச அரசியலமைப்பு திருத்தம் போன்ற நகர்வுளும் அரசியல்வாதிகளின் வீடுகளை மீள நிர்மாணிப்பது போன்ற திட்டங்களும் கூட, இரண்டாம் பட்சமானவை என்றே தோன்றுகின்றது.
ரணில் பிரதமராக பதவியேற்ற பிறகும், மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறையவில்லை. ‘ரணில் வந்தால் விலைகளைக் குறைப்பார்’ என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இன்னும் எரிவாயு தட்டுப்பாடு, ஏரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு தொடர்கின்றது.
வரிகள் அதிகரிப்பின் ஊடாகவும் இறுதி நுகர்வோராள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் தலைக்கு மேலால் போய்க் கொண்டிருக்கின்ற நிலையில், மீண்டும் பணம் அச்சிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற நிலை தோன்றியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, அரசாங்க தரப்.பினர், மக்களுக்கு இன்னும் கஸ்டங்கள் வரலாம்; நெருக்கடிகள் ஏற்படலாம் எனச் சொல்லி வருகின்றனர்: “இரு வேளை உணவையே சாப்பிடும் நிலைமை ஏற்படலாம். மக்கள் தியாகங்களைச் செய்ய தயாராக வர வேண்டும்” என்ற தொனியில், பிரதமர் அண்மையில் மக்களுக்கு கூறியுள்ளார்.
பிரதமர் ரணில், இந்தளவுக்கு வெளிப்படையாகவும் மக்களுக்கு யதார்த்தங்களை தெளிவுபடுத்தும் வகையிலும் பேசுவது முதலில் பாராட்டுக்குரியது.
ஆனால், நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும், அதற்கான திட்டங்களைச் சொல்லி, மக்களுக்கு அறிவுறுத்தல்களைச் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டத்தில் மக்களை உளவியல் ரீதியாகப் பலப்படுத்த வேண்டிய தருணத்தில், “இன்னும் கஸ்டப்படுவீர்கள்” என்று கூறுவது, எதிர்காலம் பற்றிய அச்சநிலைக்குள் மக்களை தள்ளுவதாகாதா?
நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றது என்றால் அதற்கு மக்கள் காரணமல்ல. முன்னாஸ், இந்நாள் ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களின் அடிவருடி களாக இருந்த அரச அதிகாரிகளுமே என்பதை மறுக்க முடியாது.
குறிப்பாக மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி பிணை முறி ஊடாக பெருமளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ராஜபக்ஷ குடும்பமும் அவர்களுக்கு சார்பான அரசியல்வாதிகளும் நிறைய நிதி மோசடி களைச் செய்துள்ளனர்.
அப்படியானால், இதற்குக் காரணமானவர்களுள் முக்கியமானவர்கள் இன்னும் நன்றாக அனுபவித்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த நிதி, நாட்டுக்கு மீளப் பெறப்படவில்லை. நாட்டை இந்த நிலைக்கு கொண்ட வந்த பெருந்தேசிய தலைவர்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னும் அதிகாரத்தில் உள்ளனர்.
மேலே குறிப்பிட்ட கஸ்டங்களை, வலிகளை ராஜபக்ஷ குடும்பமோ, ரணில் அரசாங்கத்தில் உள்ளவர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ அனுபவிக்கவில்லை. அவர்கள் எல்லா வசதிகளும் கொண்ட, வேறு ஓர் உலகில் வாழ்கின்றார்கள்.
இந்த நெருக்கடி கள் எல்லாம், ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களின் தலையிலேயே இறக்கி வைக்கப்பட்டுள்ளன. எந்த அரசியல்வாதியும் வரிசையில் நிற்கவில்லை; விலை அதிகரிப்பால் பாதிக்கப்படவில்லை,
ராஜபக்ஷர்களோ விக்கிரமசிங்கங்களோ. பிரேமதாஸாக்களோ, சிறிசேனாக்களோ ௫ளழல் அதிகாரிகளோ, மக்கள் செய்தளவுக்கு அர்ப்பணிப்புகளையோ தியாகங்களையோ தனிப்பட்ட ரீதியில் செய்யவில்லை.
குறிப்பாக இதற்கு முன்னர் இடம்பெற்ற கலவரங்களில் சொத்துகளை இழந்தவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் வழங்காத அரசாங்கத்தின் எம். பிக்கள், கடந்த மே மாத வன்முறையால் எரித்து, நொருக்கப்பட்ட தமது வீடுகளைத் தாமாகத் திருத்தும் தியாகத்தைக் கூட செய்யவில்லை.
மாறாக அவற்றை கட்டித்தரச் சொல்லி ஒற்றைக்காலில் நிற்கின்ற அபத்தமும், அதற்கு அரசாங்கம் நடவடி க்கை எடுக்கின்ற போக்கையுமே காண முடிகின்றது. இதேபோல், வேறு எந்த வரப்பிரசாதத்தையோ, வருமானத்தையோ சுயமாக இழப்பதற்கு 99 சதவீதமான ஆளும் தரப்பினர் தயார் இல்லை.
இந்தப் பின்னணியில், மக்களை மட்டும் இன்னுமின்னும் தியாகங்களுக்கு தயாராக வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
எல்லா வழிகளிலும் உடைந்து, மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள மக்களை, நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கை உடன் எடுக்கப்பட்டாக வேண்டும். 27/ஆவது திருத்தம் உட்பட, மற்றெல்லா அரசியல் நகர்வுகளையும் விட இதுதான் இன்றுள்ள முதன்மைப் பிரச்சினையாகும்.
இண்றைய காலகட்டத்தில் மக்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள், இன்னும் தியாகங்களைச் செய்ய நீங்கள் ரெடியா?’ என்று கேட்பது, படித்தவர்களின் பண்புள்ளவர்களின் அரசியல் சிந்தனையாகத் தெரியவில்லை. (பாதுஷா -தமிழ் மிரர் 07-06-2022)
Akurana Today All Tamil News in One Place