பேரீத்தம் பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படவில்லை என நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் விடிவெள்ளிக்கு நேற்று தெரிவித்தார். குறித்த கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சினால் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பேரீத்தம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் 2270/18ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடினையடுத்து பல பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டன. புனித ரமழான் மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக பேரீத்தம் பழங்களின் விலைகள் சுமார் 100 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டன.
இந்த திடீர் அதிகரிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பேரீத்தம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், மர்ஜான் பழீல் மற்றும் எம். எம்.முஷர்ரப் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையினை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பணிப்புரை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு பள்ளிவாசல்களுக்காக தருவிக்கப்படும் பேரீத்தம் பழத்துக்கான வரியினையும் அறவிடாதிருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்த மர்ஜான் பழீல், அதற்கும் உடன்பாடு காணப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும், குறித்த சந்திப்பு இடம்பெற்று ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், பேரீத்தம் பழ இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி பேரீத்தம் பழ இறக்குமதிக்கு சுங்கத் திணைக்களம் ஒருபோதும் அனுமதிக்காது.
இதேவேளை, பேரீத்தம் பழம், அப்பிள், ஒரேஞ் மற்றும் மாஜரின் உள்ளிட்ட 9 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு விசேட சுங்க வரியொன்று நிதி அமைச்சின் கீழுள்ள வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 9ஆம் திகதி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ பேரீத்தம் பழத்திற்கு 200 ரூபா விசேட சுங்க வரி அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(றிப்தி அலி) விடிவெள்ளி பத்திரிகை 2022-03-17 00:00:00
Akurana Today All Tamil News in One Place