புனித பூமி திட்டம் ஆரம்பம் – தம்புள்ளை பள்ளி அகற்றப்படும்.

புனித பூமி திட்டம் ஆரம்பம், தம்புள்ளை பள்ளி அகற்றப்படும். என ராஹுல தேரர் தெரிவிப்பு

தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ள தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்தும் அகற்றப்படவுள்ளது.

சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஆசிர்வாதத்துடனே இப்பணி முன்னெடுக்கப்படும் என தம்புள்ளை ரங்கிரி ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஸ் வெவ ராஹுல தேரர் தெரிவித்தார். பள்ளிவாசல் தொடர்பில் அவர் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தம்புள்ளை பள்ளி வாசல் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது. கடந்த காலங்களில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. தற்போது புனித பூமியை ஊடறுத்து A9 வீதி அமைக்கப்படுகிறது. இந்த வீதி அபிவிருத்தியின் போது பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டியுள்ளது.

இந்தப் பள்ளிவாசல் அவ்விடத்திலிருந்தும் அகற்றப்பட்டே ஆக வேண்டும். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்துடனும் பேச் சுவார்த்தை இடம் பெற்றுள்ளது.

புனித பூமியில் பள்ளிவாசல் அமைத்திருப்பதை இப்பகுதி மக்கள் எதிர்க்கின்றனர். இந்நிலையில் இன நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் சுமுகமாக இப்பிரச்சினை தீர்க்கப்படும். பள்ளிவாசலை புதியவோர் இடத்தில் புனித பூமிக்கு வெளியில் நிர்மாணித்தக் கொள்வதற்கு காணி வழங்கப்படும். அத்தோடு தற்போதைய பள்ளிவாசலைச் சூழவுள்ள குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும், அதிகாரிகளும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.

தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புனித பூமி எல்லைக்குள் அமைந்திருக்கும் பள்ளிவாசல் தொடர்பில் விரைவாக தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. தம்புள்ளை நகர சபை ரங்கிரி ரஜமகா விகாரை பொறுப்பாளர் ராஹுல தேரரை பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வொன்றினை எட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ரங்கிரி ரஜமகாவிகாரை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகி சலீம்தீன்

இவ்விவகாரம் தொடர்பில் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஒருவரான சலீம்தீன் விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில், வசதியான ஓரிடத்தில் பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்கித் தரப்பட்டால் அவ்விடத்தில் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பள்ளிவாசலைச் சூழ தற்போது சொந்தக் காணிகளையுடைய 22 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அக்குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் புனித பூமி அபி விருத்தி திட்டத்தை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் பல தசாப்த கால வரலாறு கொண்ட பள்ளிவாசல் அகற்றப்பட்டால் புதிதாக பள்ளிவாசல் நிர்மாணித்துக் கொள்வதற்கு வசதிகளுடன் கூடிய காணி வழங்கப்பட வேண்டும்.

இப்பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைகளில் இப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் சுமார் 500 முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். கொரோனா நிலைமை காரணமாகவே இவ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கொரோனாவுக்கு முன்பு சுமார் 1300 பேர் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் ஏனைய சமூகத்துடன் நல்லுறவுடனே வாழ விரும்புகிறார்கள் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி 24/2/2022 பக்கம் 1

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter