கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர்கள் சிலரின் பலத்த எதிர்ப்பினையடுத்து நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் தனியார் சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் செய்வதில்லை எனத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
‘முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பாக முஸ்லிம்களுடன் பேசினேன். பலதார மணம் முஸ்லிம் ஆண்களுக்கு சட்ட ரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மலேசியா போன்ற நாடுகளிலும் இச்சட்டம் அமுலில் உள்ளது என்பதை அமைச்சரவையில் தெளிவுபடுத்தினேன்.
‘காதி நீதிமன்றம்’ முறைமையை இல்லாதொழிக்காது ‘குடும்ப சமரசம்’ (Family Conciliate) என்ற பெயரில் இயங்கச் செய்ய வேண்டும். முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டும். குடும்ப சமரசத்துக்கென ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட வேண்டும். இங்கு தீர்க்கமுடியாத பிரச்சினைகள் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே எனது அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடங்கியிருந்தன.
பலதார மணம் தொடர்பாக குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பல நாடுகளிலும் இச்சட்டம் அமுலில் உள்ளது. எனவே பலதார மணம் முஸ்லிம் ஆண்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டுமென அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவங்ச, உதயகம்மன்பில ஆகியோர் கடுமையான எதிர்ப்பு வெ ளியிட்டதால் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கப்பெற்றதன் பின்பு அதன் அடிப்படையிலே திருத்தங்கள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
நான் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தேன். அதில் முஸ்லிம் பெண்கள் திருமண வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். திருமணப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் பெற்றுக் கொள்ளப் பட வேண்டும். தாபரிப்பு பெற்றுக் கொள்ளல் மஜிஸ்திரேட் நீதிமன்றினால் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னாள் நீதியமைச்சர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழுவின் சிபாரிசுகள் முழுமையாக அமுல் நடத்தப்பட வேண்டும், முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் போன்றனவே குறிப்பிட்ட எனது அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடங்கியிருந்தன.
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை உப குழு முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தை தடை செய்வதற்கும், காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்வதற்கும், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கும் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் இத்திருத்தங்களுக்கு பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகலாம் என்பதாலே கடந்த திங்கட் கிழமை சில திருத்தங்களுக்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்தேன். இந்த அமைச்சரவைப் பத்திரமே எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிராகரிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நீதியமைச்சர் அலிசப்ரியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடும் எதிர்ப்பு வெ ளியிட்டார். ‘முஸ்லிம்களுக்கு தனியான ஒரு சட்டம் இலங்கையில் இருக்க முடியாது. அவர்கள் பொதுவான சட்டத்தின் கீழேயே ஆளப்பட வேண்டும். நாட்டில் பல சட்டங்கள் இருக்க முடியாது. அனுமதிக்கப்பட முடியாது.
முகத்தை மூடி ஆடை அணிவதை தடை செய்வது குறித்து பிரான்ஸ் நாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இத்தடைக்கு பெரும் எண்ணிக்கையானோர் ஆதரவு வழங்கினார்கள். எமது நாட்டில் ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக இச்சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த முடியாது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை நிறுவுவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றினை நிறுவியுள்ள நிலையில் ஒவ்வோர் இனத்துக்கும் விஷேட சட்டங்களை உருவாக்க முடியாது என்று வாதிட்டார்.
இதேவேளை நாட்டில் முஸ்லிம்களின் கலை, கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதில் தவறில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை இச்சட்டத்தில் மேலதிகமாக எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப் படக்கூடாது என அமைச்சர்களான உதயகம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச தெரிவித்தனர்.
இந்நிலையிலே நீதியமைச்சர் அலிசப்ரியின் அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-02-24
Akurana Today All Tamil News in One Place