கூரகல தப்தர் ஜெய்லானியின் நுழைவாயில் மினாராக்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
பெக்கோ இயந்திரத்தால் அழிப்பு ; நேற்றுமுன் தினம் இரவு சம்பவம்
வரலாற்றுப் புகழ்மிக்க கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல்வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்களை தாங்கியிருந்த கட்டமைப்பு நேற்றுமுன் தினம் இரவு இனந்தெரியாதோரால் பெக்கோ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பிரதேசவாசிகள் பள்ளி வாசல் நிர்வாகம் உட்பட முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மினாரா அகற்றப்பட்டுள்ளமையை பள்ளிவாசலுக்குப் பொறுப்பானவர்கள் நேற்றுக் காலையே அறிந்துகொண்டுள்ளனர். உடனடி யாக இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் நேற்று சூம் இணையவழியூடாக கூட்டமொன்றினை நடாத்தி நிலைமை தொடர்பில் ஆராய்ந்தது.
இந்த நிகழ்வு தொடர்பில் ‘விடிவெள்ளி’ கூரகல புனித பூமிக்கு பொறுப்பாக செயற்படும் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன
தேரரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் சம்பவம் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்ததோடு மேலதிக தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் அம்ஜாட் மௌலானாவைத் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். ‘ஜெய்லானி பள்ளிவாசல் தொல் பொருள் பிரதேசத்திலே அமைந்துள்ளது. நாட்டில் ஒரே சட்டமே இருக்க
வேண்டும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டி ருக்கிறோம். சட்ட ரீதியான ஏற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். ஜெய்லானி பள்ளிவாசல் பௌத்தர்களின் புனித பூமியிலே அமைந்துள்ளது. இப்பள்ளி வாசல் அகற்றப்பட வேண்டும். பதிலாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வழிபாட்டுத்தலம் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 1
Akurana Today All Tamil News in One Place