அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரித்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐ.ஓ.சி.எண்ணெய் நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ள காரணத்தினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க முயற்சிக்கிறது.
தற்போதைய நிலைமைக்கமைய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.
எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜூன் மாதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த மாதம் 3 ஆம் திகதி பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
எரிபொருளின் விலை நிர்ணயத்தன்மையற்றதாக காணப்படும் பட்சத்தில் பஸ் கட்டணத்தை மாத்திரம் எவ்வாறு நிலையான தன்மையில் பேணுவது என்ற சிக்கல் நிலைமை தோற்றம் பெறுகிறது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் கட்டணத்தை குறைந்தபட்சமேனும் அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுப்பெற்றுக்கொடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
– தினகரன் – (2022-02-21 08:06:09)
Akurana Today All Tamil News in One Place