நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு நிதியுதவியினையும் மற்றும் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக சவூதி அரேபியாவின் அபிவிருத்திக்கான நிதியத்திடமிருந்து (SFD) பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சவூதி அபிவிருத்திக்கான நிதியம் பொதுவாக சமூக மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கே நிதியுதவி வழங்கிவருகிறது. என்றாலும் விமான நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் எரிபொருள் கட்டணங்களைச் செலுத்துவதில் உருவாகியுள்ள இக்கட்டான நிலைமை காரணமாக அரசாங்கம் சவூதி அபிவிருத்திக்கான நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தீர்மாதித்ததாகவும் அவர் கூறினார்.
நிதியத்தின் பதிலைப் பொறுத்தே குறுகிய கால அல்லது நீண்டகால கடன் வசதியின் அடிப்படையில் நிதியைப் பெற்றுக் கொள்வது பற்றி தீர்மானிக்கப்படும்.எவ்வளவு தொகை கடன் பெற்றுக்கொள்வது என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் நிறுவனத்திடம் எதிர்கால எரிபொருள் கட்டணங்கள் ரூபாவுக்குப் பதிலாக அமெரிக்க டொலரில் செலுத்துமாறு கோரியதையடுத்தே அமைச்சு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இலஙடகை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 330 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. இத்தொகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளிநாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காகவே எரிபொருளுக்கான கட்டணங்களை அமெரிக்க டொலரில் செலுத்துமாறு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் கோரியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதயகம்பன்பில தெரிவித்தார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-13
Akurana Today All Tamil News in One Place