அமைச்சர்கள் இன்று கடன் கேட்டு உலகம் முழுவதும் சுற்றித்திரிகிறார்கள். கட்டாருக்கு கடன் கேட்டுச் சென்ற அமைச்சர்கள் இந்நாட்டில் இனவாதத்தைப் பரப்பியவர்களே. கட்டாரில் கடன் பெற்றுக் கொள்வதற்காக அங்குள்ள முஸ்லிம்களை விடவும் மேலான முஸ்லிம்களாக அவர்கள் வேடமிட்டிருக்கின்றார்கள். கடன் பெற்றுக் கொள்வதற்கான போலி நாடகமே இது. இவ்வாறு அவர்கள் நாட்டின் நற்பெயரைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் அவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
அதிகாரத்தில் உள்ளவர்கள் உண்மையை திரிபுபடுத்தி பிரசாரம் செய்கிறார்கள். உண்மையை பொய்யாக்குகிறார்கள். பொய்யை உண்மையாக்குகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறே நடைபெற்றது. இன்றும் இவ்வாறே நடக்கிறது.
பொய்யை உண்மையாக்கியதன் பிரதிபலனையே நாட்டின் 220 இலட்சம் மக்களும் அனுபவிக்கிறார்கள். இந்த நிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு நாம் ஒற்றுமைப்படவேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளில் மூழ்கியிருக்கும் எந்த நாட்டுக்கும் முதலீட்டாளர்கள் வரமாட்டர்கள் வெளிநாட்டு செலாவணி கிடைக்காது. ஆனால் மஜிக் நடவடிக்கைகள் இடம் பெறும்.
நாட்டில் நிதிக்கையிருப்பு உள்ளதென்பதை நிரூபிக்க மத்திய வங்கியின் ஆளுநர் பில்லியன் கணக்கான நிதியினை வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார். அது நாட்டுக்கு கிடைத்த வருமானமல்ல. அன்று நாம் எவருக்கும் அடிமைப்பட மாட்டோம் என்றார்கள்.
இன்று உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக கடன் கேட்டு இந்தியாவுக்குச் செல்கிறார்கள். பாகிஸ்தானுக்குச் செல்கிறார்கள். பங்களாதேஷுக்குச் சென்று பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி மண்டியிடுகிறார்கள். கும்பிடுகிறார்கள். பங்களாதேஷ் 3 மாத கால அவகாசம் வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
கட்டாருக்கும் சென்றார்கள். கட்டாருக்குச் சென்ற சில அமைச்சர்கள், உறுப்பினர்கள் இந்நாட்டில் இனவாதத்தை பரப்பியவர்கள்.கட்டாருக்குச் சென்று அங்குள்ள முஸ்லிம்களை விடவும் மேலான முஸ்லிம்களாக வேடமிட்டிருக்கிறார்கள். கட்டாரிலிருந்து கடன் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த போலி நாடகம். நாட்டின் கெளரவத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். உலகெங்கும், கடன் பெற்றுக்கொள்வதற்காக செல்கிறார்கள். இவர்கள் தான் நாட்டுப் பற்றாளர்களா? கடன் கேட்டு பிச்சையெடுக்கிறார்கள். இந்நிலைமை கொவிட் 19 காரணமாக ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் வியட்நாம், கம்போடியா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைப் பாருங்கள். இந்நாடுகள் கொவிட் கால கட்டத்தில் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பில்லியன் கணக்கான டொலர்களாக அதிகரித்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் எமது நாட்டுக்கு 400 மில்லியன் டொலர் முதலீடுகளே கிட்டியுள்ளது.
எம்மவர்களுக்கு முறையான திட்டமொன்று இல்லை. அதற்கான இலக்கு இல்லை. அர்ப்பணிப்பு இல்லை.இயலுமை இல்லை. தலைமைத்துவம் இல்லை. அமைச்சரவை பிளவுபட்டுள்ளது. ஒரு அமைச்சர் கூறுகிறார் தலைமைத்துவம் பதவி விலக வேண்டும் என்று. 2/ 3 ஐயும் பெற்றுக்கொண்டு 20 ஐயும் பெற்றுக்கொண்டு இன்று விலகிச் செல்ல வேண்டும் என்கிறார்கள். உண்மையைக் கூறுவதென்றால் விலகிச் செல்ல வேண்டியது ஒருவரல்ல முழுஅரசாங்கமும் பதவிவிலக வேண்டும்.
இப்போது அரசாங்கத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவர்மீது விரல் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? தவறு என்னிடமில்லை. அடுத்தவரிடமே இருக்கிறது என்கிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள்.
ஒவ்வொருவர்மீது விரல் நீட்டாது இந்த நிலைமைக்கு அரசாங்கத்தின் அனைவரும் பொறுப்பு கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இதனை ஆரம்பித்தார்கள். இவர்கள்அனைவரும் நாட்டின் இன்றைய நிலைமைக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-06
Akurana Today All Tamil News in One Place