இரு செல்போன்களினால் இரு மாணவிகள் எடுத்த முடிவு ஒருவர் ஆற்றில் குதித்தார்; மற்றயவர் தீயிட்டு தற்கொலை
இரு செல்போன்களினால் இரு மாணவிகள் எடுத்த விபரீத முடிவு களினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி பேராதனை கறுப்பு பாலத்திற்கு அருகில் மகாவலி ஆற்றில் குதித்து காணாமல் போன மாணவி தொடர்பில் அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காணாமல் போன மாணவி தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய 20 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.விசாரணையில் மாணவி கடந்த 9ஆம் திகதி ஆற்றில் குதித்தது தெரியவந்தது.
அன்றைய தினம் மதியம் 2.30 மணியளவில், விளையாட்டு பயிற்சிக்காக பாடசாலைக்கு மாணவி செல்வதும், அதே நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியேறுவதும் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.பேராதனை பல்கலைக்கழகத்தை அண்டிய கறுப்பு பாலத்திற்கு அருகில் அந்த நேரத்தில் குறித்த மாணவி தன்னை சந்திக்க வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த மாணவி சந்தேகத்தின் பேரில் தனது தொலைபேசியை பரிசோதித்ததாகவும், அவர் வேறு ஒரு பெண்ணுக்கு அனுப்பிய பல குறுஞ்செய்திகளைப் பார்த்து ஆத்திரமடைந்து ஆற்றில் குதித்ததாகவும் மாணவியின் காதலன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அச்சத்தில் சம்பவத்தை யாரிடமும் கூறாமல் வீட்டுக்குச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின்படி, பொலிஸ் உயிர்காப்புக் குழுவொன்று கலு பாலத்திற்கு அருகில் மகாவலி ஆற்றில் இறங்கி தேடிய போதும் மாணவி பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக செல்போன் ஒன்றை பயன்படுத்தியுள்ள நிலையில், அதில் வந்த குறுஞ் செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் அது குறித்து எச்சரித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவி அவரது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தினக்குரல் 19/12/2021
Akurana Today All Tamil News in One Place