கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபி மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
பணி இடைநிறுத்தப்பட்ட காலப் பகுதிக்கான சம்பளத்தை அவருக்கு வழங்குமாறு சுகாதார செயலாளரால் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் வைத்தியசாலையில் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றுக்கு அறிவித்தது.
40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் அவரிடம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததுடன், அவை ஏதேனும் கடும்போக்குவாத அல்லது பயங்கரவாத குழுவிடமிருந்து கிடைத்துள்ளதா என ஆராயும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபரான வைத்தியர் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஷாபி தொடர்பில் 615 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவற்றில் 147 முறைப்பாடுகள் அவர் முன்னெடுத்த மகப்பேற்று சத்திரசிகிச்சைகளின் பின்னர் குழந்தை கிடைக்கவில்லை என கூறும் தாய்மார்களினால் பதிவு செய்யப்பட்டவையாகும்.
இதனையடுத்து, ஊடகம் மற்றும் பல்வேறு முறைகளூடாகக் கிடைத்த அறிவுறுத்தல்களுக்கமைய, வைத்தியருக்கு எதிராக சுமார் 470 பேர் முறைப்பாடு செய்திருந்தனர்.
வழக்கு விசாரணைகளை அடுத்து, ஷாபி சிஹாப்தீன் இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் 2019 ஜூலை மாதம் 25ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.
–Newsfirst.lk– (2021-12-16)
Akurana Today All Tamil News in One Place