வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் நடந்துகொள்ள வேண்டியவிதம் குறித்து தீர்க்கமான தீர்மானமொன்றை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவசரமாக கூடவுள்ளன.
20 ஆவது திருத்தத்தின்போது முஸ்லிம் எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வாக்களித்ததால் அதேபோன்று இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் அவர்கள் அப்படி நடந்துகொள்ளலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே இந்த கூட்டங்கள் நடக்கவுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. அக்கட்சியிலிருந்து விலகிய, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து அன்று பேசப்படவுள்ளது. அதேபோல் பட்ஜெட்டை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது இறுதி வாக்கெடுப்பை தவிர்ப்பதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளது.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாளை மறுதினம் சனிக்கிழமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்ற தலைமையின் முடிவை அவர் அன்றையதினம் விபரிக்கவுள்ளார் என்று அறியமுடிந்தது.
-தமிழன்.lk
Akurana Today All Tamil News in One Place