பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி, நாளை செவ்வாய்கிழமை (16) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாக இந்த போராட்டம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தடையை மீறி செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை தமது கட்சி முன்னெடுக்கும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாளைய போராட்டத்தை நடத்தும் திட்டத்தை நாங்கள் அறிவித்ததையடுத்து, வெகுஜன போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசரமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிச்சயமாகக் கடைபிடித்து
எங்கள் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பேணுமாறும் எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று மத்தும பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதற்கு ஹைட் பார்க் திடல் பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை கொழும்பு மாநகர சபை திரும்பப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு நகருக்குள் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை ஒன்று சேர்ப்பதற்காக முன்னர் எங்களுக்கு வழங்கப்பட்ட ஹைட் பார்க் மைதானத்தை மநகர சபையின் சுகாதார அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். -தமிழ் மிற்றோர்–
Akurana Today All Tamil News in One Place