ஆளும் கட்சிக்குள் தீவிரமடையும் முரண்பாடுகள்!

அரசியல் என்பது எப்போதும் விசித்திரமானதுதான், அதில் இடம்பெறுகின்ற விடயங்கள் மீண்டும் மீண்டும் விசித்திரமாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கும். யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள், கூட்டணிகள், பிளவுகள் என அரசியலில் இடம்பெறுகின்ற காய்நகர்த்தல்கள், நகர்வுகள் எவ்வளவு தூரம் விசித்திரமானது என்பதனை அதன் மீள் நிகழ்வுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோன்று அரசியல் வரலாறுகளும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டுதான் இருக்கும் போல்தெரிகிறது.

தற்போது இலங்கையின் அரசியலில் ஆளும் கட்சிக்கும் அதன் பங்காளிக கட்சிகளுக்குமிடையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடுமையான முரண்பாடுகள் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 11 பங்காளிக கட்சிகள் எங்கே அரசாங்கத்தை விட்டு வெளியேறி விடுமோ என்ற ஒரு கேள்வி கூட தற்போது அரசியல் களத்தில் எழுப்பப்படுகிறது. ஆளும் கட்சியின் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பாக 11 பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த பதினொரு கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் அது தாக்கம் செலுத்துவதாக அமையும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இந்தளவுக்கு இன்றைய நிலையில் அரசியல் சூடு பிடித்திருக்கின்றது.

ஆனால் இந்த நிலைமை இப்போது புதிதாக வந்த நிலைமை அல்ல. கடந்த இரண்டு தசாப்த கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அல்லது அரசியல் திருப்பங்களை எடுத்து நோக்கும்போது நிச்சயமாக இது போன்ற சந்தர்ப்பங்கள் பல இடங்களில் வந்து சென்றுள்ளன. அரசியலில் இவ்வாறான நிலைமைகள் இயல்பானதாக இருந்தாலும்கூட இலங்கை அரசியலைப் பொறுத்தவரை இது தொடர்ந்து விசித்திரமானதாக பதிவாகிக் கொண்டே செல்கின்றது. கூட்டணி அரசாங்கம் என்பது எந்தவொரு நாட்டிலும் சிக்கலானதாகவே அமையும். உலகில் எங்குமே கூட்டணி அரசாங்கம் என்பது நெருக்கடிகளையும் கடும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தோற்றுவிப்பதாகவே இருந்திருக்கின்றது. காரணம் பல்வேறு கொள்கைகள் உடைய கட்சிகள் ஒரு விடயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும்போது அங்கு கூட்டரசாங்கம் அமையும். ஆனால் அந்த பல்வேறு விடயங்களை கடந்து ஒரு விடயத்துக்காக ஒன்று சேர்ந்தவர்களின் அரசாங்கத்தின் செயற்பாட்டு நடவடிக்கை ஒவ்வொன்றாக இடம்பெறும்போது அந்த மாறுபட்ட கொள்கைகள் மற்றும் வேறுபட்ட கொள்கைகள் அங்கு தாக்கம் செலுத்த ஆரம்பிக்கும். அப்போது அந்த ஒரு கொள்கையின் அடிப்படையில் இணைந்த பல்வேறு பங்காளிக் கட்சிகள் அங்கு முரண்பட ஆரம்பிக்கும். அதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையின் அரசியலிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.

அண்மைய திருப்பங்கள்

அண்மைய கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது, 2004ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் கூட்டு அரசாங்கத்தை அமைத்திருந்தன. மிகவும் ஒரு பலமான முறையில் அமைக்கப்பட்ட இந்த அரசாங்கம் ஒன்றரை வருடங்களில் ஆட்டம் காண ஆரம்பித்தது. இந்த அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு 39 ஆசனங்கள் கிடைத்திருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 58 ஆசனங்கள் அளவிலேயே கிடைத்திருந்தன. இந்த சூழலில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்ற ஒரு விடயத்தை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதும் 66 ஆசனங்களை வைத்துக் கொண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடுமையான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டார். அதேபோன்று 2000 ஆம் ஆண்டு அரசாங்கமும் கூட்டு அரசாங்கமாகவே அமைந்தது. எனினும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு கட்டத்தில் கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியவுடன் அந்த அரசாங்கமும் ஆட்டம் காண ஆரம்பித்தது அதேபோன்று 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்திருந்தன.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

ஆனால் அந்த அரசாங்கத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நிலவிவந்தது. முக்கியமாக சுதந்திர கட்சியின் தலைவர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நீடித்துக்கொண்டிருந்தன. இந்த இரண்டு தலைவர்களினதும் அரசியல் கொள்கைகள் வேறுபட்டதாக காணப்படும்போதுகூட 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு காரணத்துக்காக இருவரும் ஒன்றிணைந்து பயணித்தனர். அதாவது மஹிந்த தரப்பினர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக ரணிலும் மைத்திரியும் 2015 இல் ஒன்றிணைந்தபோதும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் அவர்களது வேறுபட்ட கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள் இடம்பெற ஆரம்பித்ததும் இரண்டு தாப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் எழுந்தன. இறுதிவரை மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன. ஒரு கட்டத்தில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கிவிட்டு எதிர்த்தரப்பிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் அளவுக்குக்கூட நிலைமை மோசமாக சென்றது

அந்தளவுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையில் அந்த கூட்டு அரசாங்கத்தில் கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டன. கடுமையான நெருக்கடிகள் சிக்கல்கள் ஏற்பட்டன. இறுதியில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. அவ்வாறு மிக முக்கியமான நெருக்கடிகள் கடந்த காலங்களில் கூட அரசாங்கங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன.

தற்போதைய நெருக்கடி

அதேபோன்று தற்போது மிகப் பெரியதொரு நெருக்கடி நிலை அல்லது ஒரு முரண்பாட்டு நிலை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த கடந்தகால சந்தர்ப்பங்களை போன்று அல்லாமல் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி மிகப் பலமான நிலையில் இருக்கின்றது. கடந்த காலங்களில் கூட்டுக் கட்சிகள் அல்லது பங்காளி கட்சிகள் அரசாங்கத்தை விட்டுவிலகும்போது அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பிக்கும். அரசாங்கங்கள் கவிழ்ந்த சந்தர்ப்பங்கள்கூட இருக்கின்றன. ஆனால் தற்போது ஆளுங்கட்சியில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்ற 11 பங்காளிக் கட்சிகளும் வெளியேறினாலும் கூட பொதுஜன பெரமுனவின் அரசாங்கம்’ ஆட்டம் காணப்போவதில்லை. அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும். காரணம் சகல கட்சிகளும் வெளியே சென்றாலும் கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 113 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடியுமான நிலைமையே காணப்படுகின்றது. எனவே பங்காளிக் கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் கடுமையாக விருத்தியடைந்து கொண்டு சென்றாலும்கூட அரசாங்கத்தின் இருப்புக்கு உடனடியாக ஆபத்து ஏற்படுமா என்றால் ஏற்படாது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

அரசியல் ரீதியில் இதைப் பார்க்கும்போது அது தெளிவாக தெரிகின்றது. முரண்பாடுகள் திடீரென ஏற்படவில்லை ஸ்ரீலங்கா பொதுஜன பொமுளவின் கூட்டணியில் 11 பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தின் ஒரு சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்கூட மேலும் சில பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆளும் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் புதிதாக முளைக்கவில்லை 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 150 ஆசனங்கள் என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்து அரசாங்கம் அமைக்கப்பட்டவுடனேயே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அதில் இரட்டை குடியுரிமை உள்ளவருக்கு இலங்கை தோதலில் போட்டியிட முடியும் என்ற ஏற்பாட்டுக்கு பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. அது ஒரு மிகப் பெரிய முரண்பாட்டு நிலைமையை உருவாக்கிக்கொண்டு வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நேரடியாக களத்தில் இறங்கி பங்காளிக் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, விஜயதாச ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பங்காளிக் கட்சிகள் அனைத்தும் கையை தூக்கியிருந்தன.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அதன்பின்னர் அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தன. குறிப்பாக தொழிற்சங்கங்களுடன் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசாங்கம் இந்த விடயத்தில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது. எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இறுதியில் கிழக்கு முனைய விடயத்தில் அரசாங்கம் பின்வாங்க நேர்ந்தது. பின்னர் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்தவகையில் இந்திய நிறுவனமும் இலங்கையும் சேர்ந்து தற்போது கொழும்புத் துறைமுகத்தில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்பின்னர் ஆளும் கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கிய ஒரு முரண்பாட்டு நிலைமையாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுட முறுகலை கூறமுடியும். அமைச்சர் உதய கம்மன்பில மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக கடுமையான குற்றம் சாட்டியதுடன் அவர் அந்த பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இது பெரும் சலசலப்பை ஆளுங்கட்சிக்குள் ஏற்படுத்தியது. ஆனால் உதய கம்மன்பில தான் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை என்றும் அது பிரதமர் தலைமையிலான குழுவினால் எடுக்கப்படுகின்ற தீர்மானம் என்றும் வாதாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரலைாயை ரொபட் அன்டனி கொண்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையில்லா பிரோணையின்போது ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை யில்லா பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடித்தது. அதில் எதிர்க்கட்சிக்கு ஒருவகையில் பின் வு ஏற்பட்டது என்று கூற வேண்டும். அதாவது நம்பிக்கையில்லா பிரேரணை காரணமாக ஆளும் கட்சி மீண்டும் பலமடைந்த நிலைமை ஏற்பட்டது. கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட அந்த முரண்பாட்டு நிலைமை ஓரளவு சாதகமான நிலைமைக்கு வந்தது.

புதிய சர்ச்சை

ஆனால் அந்த நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. தற்போது மீண்டும் ஆளும் கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைய ஆரம்பித்திருக்கின்றன. அதாவது பங்காளி கட்சிகள் அரசாங்கத்திற்கு வெளியே ஒரு மக்கள் கூட்டத்தை நடத்தி பகிரங்கமாக அரசாங்கத்தின் தீர்மானங்களை விமர்சிக்கின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. அரசாங்கம் கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையத்தில் 40 வீதமான பங்குகளை அமெரிக்காவின் நியூபோர்ட்ஸ் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கியிருக்கின்றது. இது கடும் சர்ச்சையை ஆளுங்கட்சிக்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமின்றி அமெரிக்க நிறுவனத்துக்கு இங்கு ஒரு மிதக்கும் எரிவாயு களஞ்சியத்தையும் உருவாக்குவதற்கும் மற்றும் புதிதாக உருவாக்கப்படுகின்ற இயற்கை எரிவாயு மின் நிலையங்களுக்கு எரிவாயுவை விநியோகிப்பதற்கான குழாய் தொகுதியை அமைப்பதற்கான திட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி புதிதாக அமைக்கப்படும் இயற்கை எரிவாயு மின் நிலையங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு எரிவாயுவை விநியோகிப்பதற்கான உரிமையும் அரசாங்கத்தினால் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. கடந்த 4ஆம் திகதி மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்தன.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான பங்காளிக் கட்சிகள் இந்த அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின் நிலையத்தின் 40 வீதமான பங்குகள் வழங்கப்பட்டமை மற்றும் ஐந்து வருட காலத்திற்கு எரிவாயு வழங்குவதற்கான உரிமை வழங்கப்பட்டமை. மேலும் மிதக்கும் களஞ்சியம் மற்றும் குழாய் தொகுதி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் செய்யப்பட்டிருக்கும் உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவே தற்போது ஆளும் கட்சிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு பின்னணி காரணமாக காணப்படுகின்றது. இதனைத் தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது வெற்றி அடையவில்லை. ஜனாதிபதியுடன் இந்த பதினொரு பங்காளிக் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கேட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தை நிராகரித்துவிட்டார். பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் பங்காளிக் கட்சிகள் சந்தித்துப் பேசின, அதில் ஜனாதிபதியும் பங்கேற்றார். அந்த பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்று பங்காளிக் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால் யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து முன்னேற்றுவதை பங்காளிக் கட்சிகள் எதிர்க்குமாயின் அதனை எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்குமாறு இந்த கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இது தற்போது கடும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. பங்காளிக் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இதுவே தற்போதைய முரண்பாட்டின் பின்னணியாக இருக்கின்றது.

யதார்த்த நிலை

ஆனால் ஆளும் கட்சியின் பிரதிநிதிகளின் முக்கியஸ்தர்களின் கருத்துக்களை பார்க்கும்போது இந்த பிரச்சினை சமாளிக்கப்பட்டு விடும் என்றும் பங்காளிக கட்சிகள் அரசாங்கத்தை விட்டு விலகிப் போகாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பங்காளிக் கட்சிகள் வெளியேறி விடலாம், அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்ற விமர்சனங்களை பகிரங்கமாக சில அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பங்காளி கட்சிகளைப் பொறுத்தவரையில் உடனடியாக வெளியேறும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் பங்காளி கட்சிகள் தற்போது அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் கூட அரசாங்கத்தை நடத்தக்கூடிய பெரும்பான்மை பலம் இருக்கின்றது.

அதனால் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே இந்த விடயங்களை எதிர்ப்பதே தமக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பங்காளிக் கட்சிகள் கருதுகின்றன. எனவே பங்காளி கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உடனடியாக விலகும் சாத்தியமில்லை என்றும் அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. ஆனால் அரசியல் என்பது விசித்திரமானது. அரசியல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அரசியல் நிகழ்வுகள் என்பனவும் விசித்திரமாக அமைந்துவிடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எப்படியிருப்பினும் அரசாங்கத்திலிருந்து பங்காளிக் கட்சிகள் வெளியேறினாலும்கூட சாதாரண பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

எனவே அரசாங்கத்தை கொண்டு செல்லக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதுவே பங்காளிக கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கான காரணமாகவும் இருக்கலாம். ஆனாலும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் விருத்தி அடையும் பட்சத்தில் ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்படலாம். முக்கியமாக தேர்தல் நெருங்கும்போது விசித்திரமான வித்தியாசமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம். அதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த பிரச்சினையை அரசாங்கம் பங்காளிக் கட்சிகளுடன் எவ்வாறு தீர்க்கப்போகின்றது? யுகதனவி மின்நிலைய விவகாரத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறது? என்பதிலேயே பங்காளிக கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான முரண்பாட்டின் சாதக பாதக் தன்மை தங்கியிருக்கின்றது. (ராபர்ட் ஆண்டனி – வீரகேசரி 13-11-21 pg-17)