தப்தர் ஜெய்லானிக்கு உரித்தான, ஏற்கனவே மண்ணினால் மூடப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க ஸியாரங்களை மீண்டும் திறப்பதற்கு நெல்லியகல வத்துகும்புரே தம்மரதன தேரர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜெய்லானி பள்ளிவாசலின் தகர கூடாரத்தை அகற்றி விடுவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார்.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பில் அவர் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில் தொல்பொருள் ஆணையாளரின் உத்தரவுக்கமைய ஜெய்லானி பள்ளிவாசல் கட்டமைப்புகள் கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வந்தன. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அது தடை செய்யப்பட்டது. நாம் மீண்டும் ஆணையாளரின் உத்தரவை அமுல் நடத்தவுள்ளோம்.
ஜெய்லானி, தொல்பொருள் பிரதேசம் 2300 வருட வரலாற்றைக் கொண்டதாகும். இது பெளத்தர்களுக்குரியதாகும். நாம் இரு ஸியாரங்களை மூடியபோது எமக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தார்கள். பின்பு இந்த முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.
நான் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் உத்தியோக பூர்வமாக உடன்படிக்கை ஒன்றினைச் செய்து கொண்டே எனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். ஆனால் புதிய நிர்வாகத்தில் ஒற்றுமையில்லை. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள்.
சிவனொளிபாத மலைபோன்று முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து முரண்படாது தங்கள் சமயக் கடமைகளை இங்கு முன்னெடுக்க வேண்டும்.
ஜெய்லானியில் தற்போது எஞ்சியுள்ள பிரதான ஸியாரத்தை மாத்திரமே எம்மால் அனுமதிக்க முடியும். ஏனைய கட்டமைப்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஸியாரத்துக்காக அவர்கள் ஒரு மெளலவியை நியமித்துக் கொள்ளலாம். மெளலவியின் சம்பளத்தை என்னால் வழங்க முடியும்.
இங்கு பெளத்த தூபி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 1971 முதல் 1920வரை இங்கு முஸ்லிம்களே பெருமளவில் வந்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது பெளத்தர்களே பெருமளவில் வருகிறார்கள். எனவே அவர்களுக்கே முதன்மையளிக்க வேண்டும் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல் (விடிவெள்ளி)
Akurana Today All Tamil News in One Place