– மிகை இறக்குமதிகளை தவிர்க்குமாறு வேண்டுகோள்
– வர்த்தகர்களின் கடன் பிரச்சினைகளுக்கு 15,000 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை
அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகள் தொடர்பான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட 100% எல்லை வைப்புத் தொகை கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (01) மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ள எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான நிதிக் கொள்கை அறிக்கை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி, மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் 100% நிதி வைப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறு தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மற்றும் செலாவணி வெளியேற்றத்தினை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மிகையான இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்குமதியாளர்களிடம் அஜித் நிவாட் கப்ரால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் 100% எல்லை வைப்புத் தொகையை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வங்கி அறிவித்திருந்தது.
பொருட்களை இறக்குமதி செய்யும் போது வங்கியினால் அதற்கான தொகை முழுமையாக செலுத்தப்படுவதோடு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு அமைய, பின்னர் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, இறக்குமதியாளர் குறிப்பிட்ட தொகையை எல்லை வைப்புத் தொகையாக வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டியிருந்தது. குறித்த நடைமுறைக்கு அமைய, அத்தியாவசியமற்ற அல்லது உடனடி தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்கான தொகையை முழுமையாக (100%) செலுத்த வேண்டுமென மத்திய வங்கி அறிவித்திருந்தது.
கையடக்கத் தொலைபேசிகள், வீட்டு மின்னுபகரணங்கள், ஆடைகள், தளபாடங்கள், டயர்கள், வாயுச் சீராக்கிகள், பழங்கள் ஒப்பனை பொருட்கள், மதுபானங்கள், உணவுகள், குடிபானங்கள், இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இதில் உள்ளடக்கபட்டிருந்தன.
கடன் செலுத்த தவறியதற்காக வாகனங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதை 06 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க 15,000 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படுமென அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
– தினகரன் –
Akurana Today All Tamil News in One Place