கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் முடக்க காலத்தில் 10 ரூபா 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விற்பனையும் இடம்பெறாமையால் பெருமளவு கெக்கரிக்காய்கள் பழுத்தும், பழுதடைந்தும் இருப்பதாகவும் தற்போது மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்லுமாறு கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தினமும் சுமார் பத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு பிடுங்கிச் செல்வதாகவும் தெரிவித்த அவர் முடக்க நிலைக்கு முன்னர் நாளாந்தம் 500 தொடக்கம் 1000 கிலோ கிராம் வரை சந்தைப்படுத்தி வந்தாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டு வருகின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.



-வீரகேசரி-
Akurana Today All Tamil News in One Place