முஸ்லிம்களுக்கு இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீதியமைச்சர் அலி சப்ரி உடந்தையாக்கப்படுவாரா?

நீதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி, சகல சமூகங்களாலும் நேசிக்கப்படும் வகையில், பவ்வியமான கருத்துக்களை வெளியிடுவாரென தான் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படாது, அரசாங்கத்தின் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை, சிறுபான்மை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சுப் பொறுப்பையேற்ற சில பொழுதுகளில் இவ்வாறான கருத்தை அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டமை, மகிழ்ச்சிப்பிரவாகத்தின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.

எந்த விடயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை வெளியிட வேண்டிய காலத் தேவையில் நாம் உள்ளோம். சில தலைமைகளின் உணர்ச்சிகரப் போக்குகளே, சிறுபான்மைச் சமூகங்களை இன்று பெருந்தேசிய அரசியலிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது. எனவே,பொறுப்புமிக்க அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அலிசப்ரி, துள்ளாமலும் துவழாமலும் நடந்துகொள்வதுதான், இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

அரசியலமைப்பின் 19 ஆவது சரத்தை நீக்கும் விடயத்தில் “எவருக்கும் அஞ்சப்போதில்லை” என்று அவர் எதற்காகக் கூற வேண்டும். தேவைக்கு அதிகமான பாராளுமன்றப் பலத்தையுடைய அரசு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை தான். ஆனால், இதிலுள்ள தர்மங்கள், நியாயங்களைச் சிந்திப்பது ஒரு அரசின் கடமை என்பதை அமைச்சர் என்ற வகை யில், அலி சப்ரி மறக்கலாகாது. இவ்வாறு செயற்பட்டாவது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உங்களை வைத்துத்தான் முஸ்லிம்களின் சில மத விடயங்களை வெல்வதற்கு எமது சமூகம் எதிர்பார்த்துள்ளது. ஆனால், தாங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீங்கள் உடந்தையாக்கப்படுவீர்களோ! என்றே முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

ஷரீஆச் சட்டம், அரபு மத்ரஸாக்கள்,முஸ்லிம் தனியார் சட்டம், விவாக விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களை அரசுக்கு தெளிவுபடுத்தி, எமது கலாசாரத்தைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், முஸ்லிம்களை இந்த அரசுக்கு எதிராக திசை திருப்பிய காரணிகளை இல்லாமல் செய்வதும் உங்கள் கடமையில் தங்கி யுள்ளது என்பதுவும் எமது நம்பிக்கை. எனவே, உங்களுக்குக் கிடைத்த இந்த முக்கிய அமைச்சுப் பதவியூடாக சிறுபான்மையினரின் குறிப்பாக, முஸ்லிம்களின் மத, கலாசார நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில், செயற்படவேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page