புதிய கட்டுப்பாடுகள் எவையும் அறிமுகப்படுத்தவில்லை – மத்திய வங்கி

கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைகள் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் எவையும் அறிமுகப்படுத்தவில்லை என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்வதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளார்கள்/ தடுக்கப்பட்டுள்ளார்கள் என வெளியான செய்திகளை அடுத்தே இந்த அறிவிப்பினை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய வங்கி மேலும் கூறியுள்ளதாவது,

இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளை, அதாவது கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டைகள் பயன்படுத்துவதன் மீது மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை எதையும் அறிமுகப்படுத்தவில்லை எனப் பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் அத்தகைய அட்டைகளை வைத்திருப்போர் தனிப்பட்ட தன்மையிலான நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆட்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், அத்தகைய அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கும் அத்தகைய வங்கிகளின் வெளிநாட்டுச் செலாவணி நிலைமைகளுக்கு அமைவாக கொடுக்கல்வாங்கல்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்களுக்காக இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்துவதன் மீது சில வங்கிகள் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகளைப் பயன்படுத்தி சட்ட ரீதியான கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதில் எவையேனும் இடர்பாடுகளை அவர்கள் எதிர்கொள்வார்களாயின் தொடர்புடைய வங்கிகளை தொடர்புகொள்கின்ற அதேவேளை தற்போது வெளிநாட்டுச் செலாவணியினை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை மத்திய வங்கி கோருகின்றது. -வீரகேசரி-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter