நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை நாளை (23) முதல் தீர்க்கப்படும் கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் எரிவாயு விநியோக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பின் பின்னரே இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனம் தற்சயம் பழைய விலையிலும், லாஃப் கேஸ் நிறுவனம் அதன் புதிய விலைக்கும் எரிவாயுவினை விற்பனை செய்வதாக லசந்த அலகியவன்ன கூறியுள்ளார்.
உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க இந்த மாதம் லாஃப் கேஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி நுகர்வோர் விவகார பாதுகாப்பு ஆணையகம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 1,856 ரூபாவாகும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 743 ரூபாவாகவும் உயர்த்துவதற்கு லாஃப் கேஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது.
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் முன்னதாக அதன் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியதால் சந்தையில் கடுமையான எரிவாயு பற்றாக்குறை நிலவியது.

-வீரகேசரி-
Akurana Today All Tamil News in One Place